தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க கோரி அதிமுகவினர் போராட்டம்


தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க கோரி அதிமுகவினர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2019 2:01 PM IST (Updated: 7 Aug 2019 2:01 PM IST)
t-max-icont-min-icon

தியாகராயநகர் எம்எல்ஏ சத்யாவை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க கோரி அதிமுக தலைமை அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னை

மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து மாவட்ட அளவில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இதில் சென்னையில் வட்டச்செயலாளர்கள் உட்பட 43 நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அலுவலகத்திற்கு பூட்டு போட முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை தடுப்புகளை அமைத்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டக்காரர்களை தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுள் 10 பேர் மட்டும் கட்சி அலுவலகத்திற்குள் பேச்சுவார்த்தைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும் அவர் கொடுத்த தவறான பட்டியலால் தான் கட்சிக்கு விசுவாசமாக இருந்த நிர்வாகிகள் நீக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். இந்த போராட்டத்தினால், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

Next Story