கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Aug 2019 8:07 PM GMT (Updated: 7 Aug 2019 8:07 PM GMT)

தமிழக அரசின் நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டாட்சி தத்துவம், இருதரப்பு உறவுகள் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி இப்படி ஒரு கோரிக்கையை எடியூரப்பா முன்வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதன் வல்லுனர் குழு ஆகியவற்றின் முடிவை மதிக்காமல் குறுக்கு வழியில் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வாங்க எடியூரப்பா முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதாக இருந்தால் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலை பெற்று தான் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன.

எனவே, எந்த அடிப்படையிலும் மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. அதேபோல், கர்நாடக அரசும் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளதால், தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறந்து விட எடியூரப்பா ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story