நீலகிரி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு -அமைச்சர் உதயகுமார்


நீலகிரி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு -அமைச்சர் உதயகுமார்
x
தினத்தந்தி 9 Aug 2019 1:04 PM IST (Updated: 9 Aug 2019 1:04 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.

கோவை

கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மழையால் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தண்ணீர் புகுந்தது. மேலும் கம்மர்சியல் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். , உதகை கலைக் கல்லூரியில் இருந்து நகர பகுதிக்கு செல்லும் நடைபாதையில் மழைநீர் ஓடியதால் அதில் நடந்து செல்ல மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

கூடலூர் மாயாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் கரையோர குடிசைகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டுநர்கள் மரங்களின் அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் மெதுவாக இயக்கிச் செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் இன்றும் 5 வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார் பின்னர் பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  குந்தா, ஊட்டி, பந்தலூர், கூடலூர் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக 35 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. 155 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது, 1,676 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் அதிகம் ஓடும் இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வெள்ளத்தை பார்க்க வருவது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறினார்.

Next Story