வாக்கு எண்ணிக்கையில் 6 சுற்றுக்கு பிறகு நிலைமை மாறியது வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 6-வது சுற்றுக்கு பிறகு நிலைமை மாறியது. இறுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4 லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வேலூர்,
தமிழ்நாட்டில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
வேலூர் தொகுதி தேர்தல்
இதில் தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மற்ற 38 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
தேர்தல் சமயத்தில் வேலூரை அடுத்த காட்பாடி பகுதியில் வருமான வரித்துறை யினர் நடத்திய சோதனையில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதால், வேலூர் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 28 பேர் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.-தி.மு.க. இடையேதான் கடும் போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
ஓட்டு எண்ணிக்கை
ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாலாஜா அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
முதல் சுற்றிலேயே அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 25,719 வாக்குகளுடன், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை விட 913 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். தொடர்ந்து 6 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்படும் வரை ஏ.சி.சண்முகமே முன்னணியில் இருந்தார்.
நிலைமை மாறியது
அதன்பிறகு நிலைமை மாறியது. 7-வது சுற்றில் இருந்து கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். பின்னர் அவருக்கும், ஏ.சி.சண்முகத்துக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் ஒவ்வொரு சுற்றிலும் அதிகரித்தது. வாணியம்பாடி சட்டசபை தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டபோது 11-வது சுற்றில் ஏ.சி.சண்முகத்தை விட கதிர் ஆனந்த் 14,214 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். 13-வது சுற்றுக்கு பின்னர் கதிர் ஆனந்தின் வாக்கு வித்தியாசம் ஒவ்வொரு சுற்றிலும் குறையத்தொடங்கியது.
கடைசியாக வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட போது, ஏ.சி.சண்முகத்தை விட கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கதிர் ஆனந்துக்கு 4 லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகளும், ஏ.சி.சண்முகத்துக்கு 4 லட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகளும் கிடைத்தன.
கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி யும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஓட்டு விவரம்
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 14,32,555
பதிவானவை - 10,24,352
செல்லாதவை - 2,045
டி.எம்.கதிர் ஆனந்த் (தி.மு.க.) - 4,85,340
ஏ.சி.சண்முகம் (அ.தி.மு.க.)- 4,77,199
தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - 26,995
ஆர்.நரேஷ் குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)- 3,123
ஜி.எஸ்.கணேசன் யாதவ் (பிரகதிசில் சமாஜ்வாடி) - 2,480
விஜய் பவுல்ராஜா (குடியரசு சேனா)- 901
எஸ்.திவ்யா (தேசிய மக்கள் கழகம்) - 719
நோட்டா - 9,417
26 பேர் டெபாசிட் இழந்தனர்
தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனத்த், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தவிர மற்ற 26 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு, அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தி.மு.க. பலம் 24 ஆக அதிகரிப்பு
வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க.வின் பலம் 24 ஆக அதிகரித்து உள்ளது. இதில் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி யினர் 4 பேரும் அடங்குவார்கள்.
Related Tags :
Next Story