மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை நான் மனதார வரவேற்கிறேன் - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு


மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை நான் மனதார வரவேற்கிறேன் - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 12 Aug 2019 12:15 AM GMT (Updated: 11 Aug 2019 7:04 PM GMT)

மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை மனதார வரவேற்பதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்றவர்கள் என்று பாராட்டினார்.

சென்னை,

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது.

சிறப்பு அந்தஸ்து ரத்து

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 5-ந் தேதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வகை செய்யும் மசோதாவையும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதாவையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சிவசேனா, அ.தி. மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

ரஜினிகாந்த் பேச்சு

இந்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 2 ஆண்டுகளில் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுப்பயணம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ‘கவனித்தல், கற்றல், வழிநடத்துதல்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

வெங்கையா நாயுடுவை எனக்கு 25 ஆண்டுகளாக தெரியும். அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். பொது நண்பர் மூலமாக அவரை ஐதராபாத்தில் நான் சந்தித்தேன். ஒரு முறை பெங்களூருவில் 3 மணி நேரம் அவருடன் தனியாக பேசும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அப்போது அவர் தப்பித் தவறி அரசியல்வாதி ஆகி இருப்பது எனக்கு தெரிந்தது.

வெங்கையா நாயுடு தன்னை முழுமையாக ஆன்மிகத்துக்காக அர்ப்பணித்தவர். எப்போதுமே ஏழை மக்கள் பற்றியும், நாட்டை பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பவர். மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை நினைத்து நான் ரொம்பவும் ஆச்சரியப்பட்டேன்.

நினைவாற்றல்

வெங்கையா நாயுடுவின் பொது நண்பர் சசி பூசணை எனக்கு தெரியும். அவர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி பற்றி என்னிடம் சொன்னார். 25 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கையா நாயுடு தன்னுடன் கல்லூரியில் படித்த முன்னாள் நண்பர்கள் 130 பேரை அழைத்து ஐதராபாத்தில் விருந்து கொடுத்தார். அதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் பெயரை சொல்லி அழைத்திருக்கிறார்.

இதன் மூலம் அவருடைய நினைவாற்றல், அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது அவர் துணை ஜனாதிபதி பதவியில் இருந்தாலும் இன்னும் உயர் பதவிக்கு போக வேண்டும். அவருக்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்க வேண்டும் என்று நான் ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்.

மனதார வரவேற்கிறேன்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ‘மிஷன் காஷ்மீர் ஆபரேஷன்’ நடவடிக்கையை (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து) நான் மனதார வரவேற்கிறேன். இதனை நீங்கள் (அமித்ஷா) கையாண்ட விதத்துக்கு நான் தலை வணங்குகிறேன். குறிப்பாக மக்களவையில் உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது. இப்போது மக்களுக்கு அமித்ஷா யார் என்று தெரிகிறது. அதனை நினைத்து நான் சந்தோஷம் அடைகிறேன்.

மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். யார் கிருஷ்ணன்?, யார் அர்ஜுனன்? என்று எங்களுக்கு தெரியாது. அது அவர்களுக்குத்தான் தெரியும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார்.

Next Story