‘எந்த மொழியையும் திணிக்கக்கூடாது’ புத்தக வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு


‘எந்த மொழியையும் திணிக்கக்கூடாது’ புத்தக வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 11 Aug 2019 11:15 PM GMT (Updated: 11 Aug 2019 7:09 PM GMT)

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்றார்.

சென்னை, 

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இரண்டாண்டு பதவி காலத்தில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அவரது உரைகள் மற்றும் புகைப்படங்களை தொகுத்து வடிவமைக்கப்பட்ட புத்தகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சியில் கட்சி பாகுபாடின்றி எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். துணை ஜனாதிபதி ஆன பிறகு நான் பா.ஜ.க.வில் இல்லை. சில உண்மைகளை இங்கு கூற ஆசைப்படுகிறேன். நான் துணை ஜனாதிபதியாக ஆக விரும்பியதில்லை. எனது சிறுவயதில் இருந்து பொது வாழ்வில் ஈடுபட்டு இதுவரை 600 மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.

நானாஜி தேஷ்முக் போல நானும் செயல்பட விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தேன். ஆனாலும் நீங்கள்தான் இந்த பதவிக்கு சரியான நபர் என்று பலரும் கூறியதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

இனி அரசியல் கிடையாது

இந்தப் பதவிக்காக நான் கட்சி, எம்.பி. பதவி ஆகியவற்றை விட்டுவிட்டுச் சென்றபோது மனது கனத்தது. ஏனென்றால், ஒரு அடிப்படை தொண்டனையும் உச்ச பதவிகளுக்கு கொண்டு வந்தது இந்த கட்சிதான். சுவற்றில் கட்சி விளம்பரங்களை எழுதிக் கொண்டிருந்த என்னை, அந்த கட்சியின் அகில இந்த தலைவராக, எம்.எல்.ஏ.யாக, எம்.பி.யாக, மத்திய மந்திரியாக ஆக்கியதும் இந்த கட்சிதான்.

அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டால் உச்சங்களை தொடலாம் என்பதற்கு நான் உதாரணம். அப்போதெல்லாம் பா.ஜ.க. ஆட்சிக்கு வராது என்று சொன்னவர்கள் அதிகம். இனி நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. தேர்தல்களில் போட்டியிட போவதுமில்லை. ஆனால் இந்தியாவை முன்னேற்ற, அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக பணிகள் உள்ளன.

தேச நலனுக்காக...

அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கான கோரிக்கை, முந்தைய ஆண்டுகளிலேயே நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான மசோதா, மத்திய அரசால் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டபோது, மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் இதை எவ்வாறு நிறைவேற்ற போகிறோம் என்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. எம்.பி.க்களை வெளியேற்றிவிட்டு, கதவை மூடிவிட்டு செயல்படுவதை நான் விரும்பவில்லை.

ஆனால், எந்தவித இடையூறும் இல்லாமல், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. இது அரசியல் பிரச்சினை இல்லை. காஷ்மீர் மக்களுடன் இணைந்து, அங்கு இயல்பு நிலையை ஏற்படுத்துவதே தற்போதைய தேவையாக உள்ளது.

தேச நலன் கருதியே அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்று, அதை உள்வாங்கி, நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும். கட்சியின் நலனுக்காக அல்லாமல் தேசத்தின் நலனுக்காக சிந்திக்க வேண்டும். எனவே 370-ம் அரசியல் சட்டப்பிரிவை அரசியல் பிரச்சினையாக பார்க்காமல் தேச பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை

சுப்ரீம் கோர்ட்டின் கிளையை முதல் கட்டமாக சென்னையில் அமைக்க வேண்டும். பின்னர் நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் அமைக்கப்பட வேண்டும். நீதியை பெறுவதற்காக மக்கள் நீண்ட தொலைவுக்கு பயணம் செய்து அதிக பணம் செலவிடுவதை இதன்மூலம் தவிர்க்கலாம்.

மாநில உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே வாதாட அனுமதி அளிக்கப்பட வேண்டும். நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதோடு, அரசியல் சாசன வழக்குகளை விசாரிக்கவும், மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கவும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும்.

நீதித்துறை செயல்பாடுகளும் மக்களுக்கு ஏற்ற வகையில் முறைப்படுத்தப்பட வேண்டும். ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டில் 60 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஐகோர்ட்டுகளில் நிலுவையில் 44 லட்சம் வழக்குகள் உள்ளன.

நீதிபதிகள் நியமன முறை

குற்ற வழக்குகள், தேர்தல் வழக்குகள் போன்றவற்றின் மீதான விசாரணை நீண்டகாலம் நடக்கிறது. நீதித்துறைமீது மக்கள் நம்பிக்கை இழக்காத வகையில் அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். தீர்ப்பாயங்கள் அமைத்து வழக்குகளை ஒரு ஆண்டுக்கு மிகாமல் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்சித் தாவல் தடைச் சட்டமும் உறுதியாக செயல்படுத்தப்பட வேண்டும். கட்சித் தாவிச் சென்றவர்கள் அமைச்சராக பதவி ஏற்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதுபோன்ற வழக்குகளும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நியமனத்தில் தற்போது “கொலிஜியம்” என்ற நடைமுறை உள்ளது. ஆனால் ஒரு நீதிபதியை மற்ற நீதிபதி குற்றம்சாட்டி பத்திரிகைகளில் கூறும் நிலையும் அதில் இருக்கிறது. எனவே எந்த குற்றச்சாட்டுக்கும் வழிவகை இல்லாத, வெளிப்படையான, நம்பிக்கைக்கு உரிய மிகச் சிறந்த தேர்வு முறையை உடனடியாக உருவாக்க வேண்டும்.

இந்தியாவுக்கு அங்கீகாரம்

முன்பு இந்தியாவில் நாலந்தா போன்ற பல முன்னணி பல்கலைக்கழகங்கள் இருந்தன. அப்போது நமது நாடு உலகத்திற்கே வழிகாட்டியாக திகழ்ந்தது. இந்த பெருமையை நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு மீட்டெடுக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக, உலக அரங்கில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான அங்கீகாரம் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. மற்ற நாடுகளில் இந்தியாவை பாராட்டுகின்றனர்.

நாட்டிலிருந்து ஏழ்மை, எழுத்தறிவின்மை, சாதி, மதம், பாலினப் பாகுபாடுகள் அகற்றப்பட்டு, சமத்துவம் நிலவச் செய்ய வேண்டியது அவசியம். இதுதான் எனது லட்சியம். இதற்காக மக்களை சந்தித்து, அவர்கள் பிரச்சினையை கேட்டு, அதை அரசிடம் தெரிவித்து வருகிறேன்.

மொழியை திணிக்கக்கூடாது

பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர்களான ராம்நாத் கோவிந்த், நரேந்திர மோடி ஆகியோர் உயர்ந்த பதவிகளை எட்டியிருக்கின்றனர். சாதாரண ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த நானும், விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதால், அரசியலிலும், பொதுவாழ்விலும் உயர்ந்த நிலையை எட்ட முடிந்தது.

இளைய தலைமுறையினர் இதை ஒரு முன்னுதாரணமாக ஏற்று, தங்களது லட்சியங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும். தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை ஒருபோதும் மறக்கக்கூடாது.

தாய்மொழி என்பது கண் போன்றது. ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் மூக்கு கண்ணாடி போன்றதுதான். கண் இல்லாமல் கண்ணாடி போட்டும் பயனில்லை. எனவே எந்த மொழியையும் யாரும் எதிர்க்கவும் கூடாது. எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கவும் கூடாது.

கட்சிகளுக்கு வேண்டுகோள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள ஏதுவாக, சம்பந்தப்பட்ட கட்சிகளே விதிமுறைகளை வகுக்க வேண்டும். இது நான் அனைத்து கட்சிகளுக்கும் வைக்கும் வேண்டுகோளாகும்.

திறமை, ஒழுக்கம் உள்ளவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். சாதி, பணம் என்ற அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது. மக்களுக்காக அவர்கள் செய்துள்ள அர்ப்பணிப்பை கவனிக்க வேண்டும்.

அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கேற்ற வகையில் பயன்கள் சென்றடையும் முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இடைத்தரகர் இல்லாமல், அரசிடம் இருந்து மக்கள் நேரடியாக பயன்களை பெறவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story