இன்று பக்ரீத் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


இன்று பக்ரீத் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Aug 2019 12:59 AM GMT (Updated: 12 Aug 2019 12:59 AM GMT)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இறைவனின் கட்டளையை ஏற்று, தன் தனையனையே இறைவனுக்கு அர்ப்பணிக்கத் துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். விட்டுக்கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்கவேண்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இஸ்லாமியர்கள் அனைவருக்கும் தியாக திருநாளான பக்ரீத் நல்வாழ்த்துகளை, தி.மு.க.வின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். தியாகம், அறம், மனிதநேயம், ஏழை-எளியவர்கள் மீது பரிவு, கருணை உள்ளிட்ட உயர்ந்த நற்செயல்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இஸ்லாமியர்கள் தியாக திருநாளை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஏழைகள் மீது காட்டும் கருணை தனி மனித வாழ்வில் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதுவே சமுதாய அளவில் மிகுந்த நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. இந்த தியாக திருநாளில் சமுதாய நல்லிணக்கம் போற்றும் பணியின் சிறப்பம்சத்தை எடுத்துரைக்கும் வகையில் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாழ்த்து

இதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், மக்கள் தேசிய கட்சி நிறுவனத்தலைவர் சேம நாராயணன்,

இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் எம்.முகமது இஸ்மாயில், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணி அரசன், தியாகராயநகர் வியாபாரிகள் நல சங்க தலைவர் அலிமா சம்சு கனி ஆகியோர் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story