ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடி, வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை -வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு


ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடி, வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை -வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 12:30 PM GMT (Updated: 12 Aug 2019 12:30 PM GMT)

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 லட்சம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. தற்போது வினாடிக்கு 3 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல்-மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும்  கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த இருநாட்களாக மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது.

அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு  பயன்படும் வகையில் மேட்டூர் அணையை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு காலதாமதமாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சம்பா, தாளடி சாகுபடிக்காவது முழுமையாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மேலும் ஒகேனக்கல்லில் இருந்து வரும் தண்ணீர் சேலம் மாவட்ட எல்லையான அடிபாலாறு பகுதியில் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர கிராமங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்கனவே நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தண்டோரா மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி உயரமாகும். இதில் தற்போது நீர்மட்டம் 90 அடியை தாண்டிவிட்டது. மேலும் காவிரியில் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டுள்ளதால் விரைவில் அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story