மாநில செய்திகள்

போக்குவரத்துக்கழக பஸ்களால் 10 ஆண்டுகளில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி + "||" + By transit buses In 10 years How many accidents have happened To the Government of Tamil Nadu, The question of High Court

போக்குவரத்துக்கழக பஸ்களால் 10 ஆண்டுகளில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

போக்குவரத்துக்கழக பஸ்களால் 10 ஆண்டுகளில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களால் நடந்த விபத்துகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

தனியார் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்தவர் சண்முகம் (வயது 41). இவர், கடந்த 2011-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில், ராஜாஜி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாநகர பஸ் மோதியதில் பலியானார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம், சண்முகத்தின் மனைவி வாணி மற்றும் அவரது பெற்றோருக்கு ரூ.45.29 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.


இதை எதிர்த்து மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வங்கியை தேசியமயமாக்கியதுபோல, பொதுமக்களின் நலனுக்காக தனியார் போக்குவரத்துக்கழகங்கள் எல்லாம் தேசியமயமாக்கப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலும் போக்குவரத்துத்துறை அரசுடமையாக்கப்பட்டது. சேவை மனப்பான்மையுடன், லாபநோக்கம் இல்லாத அரசு போக்குவரத்து கழகங்களாக அவை செயல்படத் தொடங்கின.

தற்போது அந்த நோக்கமே சீர்குலைந்து வருகிறது. பல்வேறு காரணங்களால், நீண்டகாலமாக செயல்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்துக்கழக பஸ் டிரைவர்கள் சிலர், பயணிகள் இறங்குவதற்கு முன்பும், ஏறுவதற்கு முன்பும் பஸ்களை இயக்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இழப்பு ஏன்?

லஞ்சம், அரசியல்வாதிகளின் தலையீடு, திறமையின்மை, தொழிற்சங்கங்கள், ஊழியர்களின் பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான செயல்கள் ஆகியவை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.

தனியார் பஸ் முதலாளிகள் எல்லாம் திறமையாக, பஸ் தொழிலை லாபகரமாக்குகின்றனர். பல பஸ்களை வாங்குகின்றனர். ஆனால், அரசு போக்குவரத்துக்கழகங்கள் இதுபோல் செயல்படவில்லை. சென்னையில் தினமும் அரசு பஸ் டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி பஸ்களை ஓட்டுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கும். போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்யும் என்பதால், டிரைவர்கள் மீது போலீசாரும் நடவடிக்கை எதுவும் எடுப்பது இல்லை.

பல விபத்துகள் டிரைவர்களின் பொறுப்பற்றத்தன்மையாலும், கவனக்குறைவுடன் வேகமாக பஸ்சை ஓட்டுவதாலும் நிகழ்கிறது. இதனால், விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் தினமும் பரிதாபமாக பலியாகின்றன. பலர் படுகாயமடைகின்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடரும்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போக்குவரத்துக்கழகம் பெரும் தொகை இழப்பீடாக வழங்க வேண்டியதுள்ளது.

இந்த வழக்கு அதற்கு மிக சிறந்த உதாரணமாகும். பஸ் டிரைவர், வேகமாக, கவனக்குறைவுடன் பஸ்சை ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டு, அதில் 41 வயதில் சண்முகம் பலியாகியுள்ளார். அவர் ஆண்டுக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை ஊதியம் பெற்றுள்ளார். எனவே, அவரது வயது, ஊதியம் உள்ளிட்டவைகளை கணக்கிடும்போது, தீர்ப்பாயம் நிர்ணயித்த இழப்பீட்டு தொகை போதாது. எனவே, ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு நிர்ணயம் செய்கிறோம்.

மேலும், விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் எத்தனை விபத்துகளின் விவரங்களை சேகரிக்க வேண்டியதுள்ளது. அதனால் கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான பஸ்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளன?, அதில் எத்தனை பேர் பலியாகியுள்ளனர்?, எத்தனை பேர் படுகாயம் அடைந்துள்ளனர்?, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் இழப்பீடு கேட்டு கடந்த 10 ஆண்டுகளில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்?,

எத்தனை வழக்குகளில் எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது?, விபத்துக்கு காரணமான டிரைவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?.

எத்தனை பேருக்கு தண்டனை?

விபத்து வழக்கில் எத்தனை டிரைவர்கள் தண்டனை பெற்றுள்ளனர்?, போக்குவரத்து துறையில், விபத்து புலனாய்வு பிரிவு உள்ளதா?, அப்படி இருந்தால், எத்தனை விபத்துகள் புலனாய்வு செய்யப்பட்டுள்ளன?, டிரைவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவிடாமல் தொழிற்சங்கங்கள் தடுப்பதாக கூறப்படுகிறதே?, இது உண்மையா?, அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால் தான் விபத்துகள் நடைபெறுகிறதா?.

தினமும் வசூலாகும் தொகையை, பஸ் நடத்துனர் செலுத்தும்போது, அதை வசூலிக்கும் அதிகாரிகள் அதற்கான ஒப்புகை வழங்குவது இல்லை என்று கூறப்படுகிறதே, இதனால் ஊழல் முறைகேடு நடைபெறுகிறதா? என்பது உள்பட 25 கேள்விகளுக்கு, தமிழக போக்குவரத்து செயலாளர், போக்குவரத்துக்கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விரிவான பதில் மனுவை வருகிற செப்டம்பர் 5-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.