மாநில செய்திகள்

மதுபான பாட்டில்களை கோவிலில் படையலிட்டு வழிபாடு + "||" + Liquor bottles Worship in the Temple

மதுபான பாட்டில்களை கோவிலில் படையலிட்டு வழிபாடு

மதுபான பாட்டில்களை கோவிலில் படையலிட்டு வழிபாடு
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி சோனைமுத்து கருப்பசாமிக்கு மதுபான பாட்டில்களை படையலிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சின்னமனூர்,

தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு திருநள்ளாறு மற்றும் தேனி மாவட்டம் குச்சனூர் ஆகிய 2 இடங்களில் மட்டும் கோவில்கள் உள்ளன. இதில் தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு வடிவில் சனீஸ்வர பகவான் வீற்றிருக்கிறார். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம்.


விழாவையொட்டி கோவிலில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் சோனைமுத்து கருப்பசாமிக்கு ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அன்று கிடா வெட்டி, பொங்கல் வைத்து மற்றும் மதுபான பாட்டில்களை படையல் படைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமையான நேற்று சோனைமுத்து கருப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை படையலிட்டு வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து சோனைமுத்து கருப்பசாமிக்கு 57 ஆடுகள், 42 கோழிகளை வெட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அதன் பின்பு கோவில் கதவு மூடப்பட்டு, சாமிக்கு முன்பு வைக்கப்பட்ட பாட்டில்களில் உள்ள மதுவை கலயத்தில் பூசாரிகள் ஊற்றினர். அவ்வாறு கலயத்தில் ஊற்றும்போது மதுபான வாசனை வராது என்றும், கலயமும் நிறையாமல் இருக்கும் என்றும், அதனை சாமி குடிப்பதாகவும் பக்தர்கள் கூறினர்.