சென்னையில் திருக்குறள் மாநாடு வைகோ, கி.வீரமணி பங்கேற்பு


சென்னையில் திருக்குறள் மாநாடு வைகோ, கி.வீரமணி பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 10:52 PM GMT (Updated: 12 Aug 2019 10:52 PM GMT)

சென்னையில் திருக்குறள் மாநாடு நடந்தது. இதில், வைகோ, கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சென்னை,

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருக்குறள் மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. காலையில் நூல் வெளியீடு, அறிஞர்கள் மற்றும் பதிப்பாளர்களை சிறப்பித்தல், மாணவர் மற்றும் இளைஞர் அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் நிறைவு விழா நடந்தது.

விழாவுக்கு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை தாங்கினார். தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன், தமிழ் விடியல் கட்சி டைசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாசா வல்லவன் வரவேற்றார்.

விழாவில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருக்குறளில் வாழ்வியல் நெறிகள் குறித்த அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்குறளை உலக பொது மறையாக அறிவிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. மனுதர்மத்தை எதிர்க்க திருக்குறளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று தந்தை பெரியார் பல்வேறு மாநாடுகளில் அறிவுறுத்தினர். இதைத்தான் தற்போது பெரியார் உணர்வாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

நான், எட்டாம் வகுப்பு படிக்கும் போதே கலிங்கப்பட்டியில் திருக்குறள் கழகத்தை தொடங்கியவன். பல்வேறு தமிழ் அறிஞர்களை அழைத்து திருக்குறள் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன். நான், அரசியலுக்கு வருவதற்கு முன்பு எங்கள் வீட்டில் திருவள்ளுவர் படம் மட்டுமே இருக்கும். திருக்குறளுக்கு நிகரான உரைகள் அடங்கிய புத்தகம் உலகத்திலேயே எங்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, ‘1949-ம் ஆண்டு தந்தை பெரியார் மிக பிரமாண்டமாக திருக்குறள் மாநாட்டை நடத்தினார். தற்போது திருக்குறளை ஒரு கும்பல் அழிக்க நினைக்கிறது. திருக்குறளை ஏற்றுக்கொள்வது போன்று பேசி அப்படியே அழித்து விடுவது என்ற சூத்திரத்தை அந்த கும்பல் கையில் எடுத்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இனமானத்தை காப்பாற்ற நமது மானத்தை கூட இழக்க தயாராக இருக்க வேண்டும். அதற்கு நாம் தயங்கக்கூடாது. இதுபோன்ற கும்பலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது’ என்றார்.

திருக்குறளை தமிழகத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், வழிபாட்டு தலங்களில் திருக்குறள் நூலகம் அமைக்கப்பட வேண்டும், உலக திருக்குறள் மாநாட்டை தமிழக அரசு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான்பாகவி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நடிகர் சத்யராஜ், சுப.வீரபாண்டியன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன்காந்தி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் ஆனைமுத்து, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story