மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் கிருஷ்ணர்-அர்ஜுனரா? ரஜினிகாந்த் மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி காட்டம்


மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் கிருஷ்ணர்-அர்ஜுனரா? ரஜினிகாந்த் மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி காட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2019 11:22 PM GMT (Updated: 12 Aug 2019 11:22 PM GMT)

மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் கிருஷ்ணர், அர்ஜுனரா என்றும், ரஜினிகாந்த் மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370-வது சட்டபிரிவு நீக்கப்பட்டதை மிக நல்லமுறையில் அமித்ஷா செய்திருக்கிறார் என ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ரஜினிகாந்திடம் இருந்து இதுபோன்ற கருத்தினை எதிர்பார்க்கவில்லை. அவருடைய இந்த கருத்தை படித்த பிறகு நான் மிகவும் சோர்வடைந்தேன். ரஜினிகாந்த் இயல்பிலேயே மிகவும் நல்ல மனிதர். யாருக்கும் தீங்கு இழைக்காதவர். ஆன்மிகத்தின் மீது நாட்டம் கொண்டவர். எனவே, அவர் அப்படி சொல்லியிருப்பது ஆச்சரியம் அளித்துள்ளது.

ரஜினிகாந்த் ஆன்மிக உணர்வு என்பது மத உணர்வு என தவறாக புரிந்து கொண்டிருக்கிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிகம் என்பது மதம் சார்ந்தது அல்ல. அநீதியை கண்டு சிலிர்த்து எழுகிற நமது கதா நாயகன் பாட்ஷா (ரஜினிகாந்த்) காஷ்மீரத்திற்கு ஒரு நீதி, பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி என்கிற அமித்ஷாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறரா?.

மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜுனர் என்றும் ரஜினி சொல்கிறார். மோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள். இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல. பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும். ரஜினிகாந்த் தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும். திரும்பவும் சரியாக படியுங்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story