மாநில செய்திகள்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிய கதவணை கட்டும் பணி பாதிக்கப்படுமா? பொதுப்பணித்துறை அதிகாரி பதில் + "||" + At Trichy Triangle kollidam Work on building new doors Will be affected

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிய கதவணை கட்டும் பணி பாதிக்கப்படுமா? பொதுப்பணித்துறை அதிகாரி பதில்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிய கதவணை கட்டும் பணி பாதிக்கப்படுமா? பொதுப்பணித்துறை அதிகாரி பதில்
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதால் திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிய கதவணை கட்டும் பணி பாதிக்கப்படுமா? என்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரி பதில் அளித்தார்.
திருச்சி,

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, கரூர் வழியாக மாயனூர் தடுப்பணைக்கு வந்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணையை அடையும். பின்னர் முக்கொம்பு மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாக பிரிந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் சில மாவட்டங்களின் பாசனத்திற்கும், குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கும் வகையிலும் உள்ளது.


கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆகஸ்டு 22-ந்தேதி இரவு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்டது. அந்த அணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இந்த நிலையில் கொள்ளிடம் கதவணையில் உடைப்பு ஏற்பட்ட மதகுகள் ரூ.38 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகமாக பலப்படுத்தும் பணி கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்ததாக, உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் கதவணையில் கீழ் பகுதியில் 75 மீட்டர் தொலைவில் புதிய கதவணை ரூ.387 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான 484 தூண்களில் 71 தூண்களை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இந்த தூண்கள் ஒவ்வொன்றும் 15 முதல் 18 மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்த தூண்களில் தண்ணீரினால் அரிப்பு ஏற்படாமல் இருக்க ‘எப்பாக்சி’ என்ற தொழில் நுட்பத்தில் பணிகள் நடந்து வருகின்றன.

புதிய கதவணையின் மொத்த நீளம் 630 மீட்டர் ஆகும். அணையின் மேல் பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்படும். கட்டுமான பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

வெள்ளம் வந்தால் பாதிக்குமா?

இதற்கிடையே மேட்டூர் அணையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே, தொடர்ந்து காவிரியில் தண்ணீர் வந்தால், திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்டும் பணி பாதிக்கப்படும் என்றும், மீண்டும் ஒரு பெரிய அபாயத்தை சந்திக்கும் நிலை ஏற்பட இருப்பதாக விவசாயிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கர் கூறியதாவது:-

மேட்டூர் அணைக்கு தற்போது கபினி அணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணையில் விவசாய பாசன தேவைக்காக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்ற தகவல் உள்ளது. எனவே, கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்டும் பணியில் பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் முக்கொம்பு காவிரி ஆற்றில்தான் விவசாய தேவைக்கு தண்ணீர் திறக்கப்படும். கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உபரிநீர் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் பணியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூரில் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே கொள்ளிடம் ஆற்றில் உபரியாக தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. அப்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.