4 நாட்களில் 40 அடி உயர்ந்தது: நீர் வரத்து அதிகரித்ததால் வேகமாக நிரம்புகிறது, மேட்டூர் அணை இன்று திறப்பு-எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்


4 நாட்களில் 40 அடி உயர்ந்தது: நீர் வரத்து  அதிகரித்ததால் வேகமாக நிரம்புகிறது, மேட்டூர் அணை இன்று திறப்பு-எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 13 Aug 2019 12:15 AM GMT (Updated: 12 Aug 2019 11:51 PM GMT)

நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது. பாசனத்துக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அணையை திறந்து வைக்கிறார்.

மேட்டூர்,

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மைசூரு அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் மற்றும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், அவற்றில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு வினாடிக்கு 2 லட்சத்து 73 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் கே.ஆர்.எஸ். அணை நேற்று முழு நீர்த்தேக்க அளவான 124.80 அடி உயரத்தை எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 4 ஆயிரத்து 200 கனஅடி வீதம் வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கர் நாடகத்தில் காவிரி கரையோரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284.80 அடி உயரம் கொண்ட கபினி அணையும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதால், அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு இருக்கிறது.

இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு சுமார் 3 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

நேற்று முன்தினம் மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 94 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், அணை வேகமாக நிரம்பி வருகிறது.

கடந்த 9-ந் தேதி அணையின் நீர்மட்டம் 54 அடியாக இருந்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 40 அடி உயர்ந்து இருக்கிறது.

போதிய நீர் இருப்பு இருந்தால் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவுக்கு நீர் இல்லாததால் ஜூன் 12-ந் தேதி அணை திறக்கப்படவில்லை. தற்போது நீர்மட்டம் 90 அடியை எட்டிவிட்டதால், பாசனத்துக்காக அணை இன்று (செவ்வாய்க் கிழமை) திறக்கப்படுகிறது.

அணை வேகமாக நிரம்பி வருவதையும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு நெல் சாகுபடிக்காக அணையை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அணையை திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற அவர், பின்னர் அங்கிருந்து சேலம் சென்றார். சேலத்தில் இருந்து இன்று மேட்டூர் சென்று காலை 8.30 மணிக்கு அணையை திறந்து வைக்கிறார்.

பின்னர், சேலத்தில் இருந்து அவர் பகல் 11.20 மணிக்கு விமானத்தில் சென்னை புறப்பட்டு வருகிறார். மாலை 5 மணிக்கு சென்னை கலை வாணர் அரங்கத்தில் நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணை இன்று திறக்கப்படுவதால் காவிரி படுகையில் உள்ள ஏறக்குறைய 700 ஏரி, குளங்களில் நீரை நிரப்பி, அதன் வாயிலாக பாசனத்துக்கு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த ஆண்டு காலதாமதமாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சம்பா, தாளடி சாகுபடிக்காவது முழுமையாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story