பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி : சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு


பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி : சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 12:30 AM GMT (Updated: 13 Aug 2019 11:10 PM GMT)

வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், ரெயில், விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு. சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை, 

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாளை (வியாழக் கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்காக உரையாற்ற இருக்கிறார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருக்கிறார். சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதாவது, காஷ்மீர் விவகாரத்தின் தாக்கம் எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

சுதந்திர தினத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், முக்கிய இடங்களில் தேவையான அளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நகரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கோவில்கள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. அன்றில் இருந்து, விமான நிலையத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சென்னையில் இருந்து சவுதி அரேபியா செல்லும் விமானத்தில் வெடிமருந்து உள்ளதாக பெண் ஒருவர் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உள்நாட்டு பாதுகாப்பு படை, உளவுப்பிரிவு அதிகாரிகள் என கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், “பயணத்திற்குரிய முறையான டிக்கெட் இருந்தால் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்க வேண்டும். வேறு யாரையும், பார்வையாளர்களையும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. எல்லா நிலைகளிலும் முழுமையான சோதனை நடத்தப்பட்ட பிறகே, பயணிகளை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும். வாகன நிறுத்தும் இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்” என்று முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே, ஜம்மு - காஷ்மீர் விவகாரம், சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மிரட்டல் வேறு விடுக்கப்பட்டதால், மேலும் பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டுள்ளது. இந்த உச்சக் கட்ட பாதுகாப்பு நடவடிக்கை இம்மாதம் 31-ந்தேதி நள்ளிரவு வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், அன்சருல்லா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 16 பயங்கரவாதிகளை தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. உளவுத்துறை கொடுத்த முன்னெச்சரிக்கை அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை சாத்தியமானது.

இதன் எதிரொலியாகவும், தேவையான இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், ஓட்டல்கள் உள்ளிட்ட தங்கும் விடுதிகளில் வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் வெளிமாநிலத்தினர் யார்-யார் தங்கியுள்ளனர்? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. முக்கிய சாலை சந்திப்புகளில், போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான சோதனைகளுக்கு பிறகே, வாகனங்கள் நகருக்குள் வரமுடியும் என்ற நிலை உள்ளது.

அதேபோல, சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளும், அவர்களது உடைமைகளும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்த பிறகே ரெயிலில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். சாதாரண உடையிலும் போலீசார் பயணிகளோடு பயணிகளாக நின்று ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளிலும் குதிரைகளில் ரோந்து சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story