தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


தூத்துக்குடி ‘சிப்காட்’ வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 14 Aug 2019 12:14 AM GMT (Updated: 14 Aug 2019 12:14 AM GMT)

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எப்படி? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியர் பாத்திமாபாபு சார்பில் மூத்த வக்கீல் வைகை ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் 1974-ம் ஆண்டு மீளவிட்டான் பகுதி 2 ஆக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவை விவசாய நிலம் என்றும், மற்றொன்றை பொது தொழிற்சாலை தொடங்கும் பகுதி என்றும் அறிவிக்கப்பட்டது. விவசாயம் மற்றும் பொதுதொழிற்சாலை பகுதிகளில் தான் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆலையின் தொடக்கமே தவறாக உள்ளது.

சிறப்பு மற்றும் அபாயகரமான தொழிற்சாலைகள் தொடங்கும் மண்டலமாக அப்போது பழைய காயல், சாமிநத்தம் ஆகிய கிராமங்கள் தான் வகைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சிப்காட்’ வளாகத்தில் இடம் அளித் ததும் தவறு. மேலும், இந்த ஆலை சுற்றுச்சூழல் தடையில்லா சான்றுக்காக விண்ணப் பித்தபோது, 102.31 ஹெக்டேர் நிலம் தங்களிடம் இருப்பதாகவும், 69.86 ஹெக்டேர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்போவதாகவும், அதற் கான பணத்தை சிப்காட் நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டதாகவும் ஸ்டெர்லைட் ஆலை கூறியது. மேலும், அந்த 69.86 ஹெக்டேர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்போவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்ப்பதாகவும் கூறியது.

பின்னர் ஸ்டெர்லை ஆலை 2-வது யூனிட்டை தொடங்க விண்ணப்பித்தபோது, அதே 69.86 ஹெக்டேர் நிலத்தை சிப்காட் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெற்றுள்ளதாக கூறியுள்ளது. அதாவது ஒரே நிலத்தை 2 விண்ணப்பங்களிலும் குறிப்பிட்டு மோசடி செய்துள்ளது. ஆலையின் இந்த செயல் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வரும் வாழைப்பழ ‘காமெடி’ போல் உள்ளது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அவரது வாதத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்யமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இடம் அளித்தது எப்படி? என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை இன்று (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தனர்.

Next Story