மாநில செய்திகள்

‘செல்போனுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை விடுங்கள்’ கல்லூரி மாணவிகள் மத்தியில் கவிஞர் வைரமுத்து பேச்சு + "||" + Leave a day off for a cell phone. Vairamuthu talks among college students

‘செல்போனுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை விடுங்கள்’ கல்லூரி மாணவிகள் மத்தியில் கவிஞர் வைரமுத்து பேச்சு

‘செல்போனுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை விடுங்கள்’ கல்லூரி மாணவிகள் மத்தியில் கவிஞர் வைரமுத்து பேச்சு
செல்போன் நேரத்தை கொல்லும் உயிர்க்கொல்லி என்றும், அதற்கு வாரம் ஒருநாள் விடுமுறை விடுங்கள் என்றும் கல்லூரி மாணவிகள் மத்தியில் கவிஞர் வைரமுத்து பேசினார்.
சென்னை, 

சென்னை வேப்பேரியில் உள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை-தமிழ்ப்பாவை மன்றம் சார்பில் முத்தமிழ் விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.

விழாவில் கல்லூரி செயலாளர் கவுதம் தலைமை தாங்கினார். முதல்வர் மாலதி வரவேற்புரையாற்றினார். கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

பொன்னாடைகளும் பூமாலைகளும் பெறுவதற்காக இந்த பெண்கள் கல்லூரிக்கு நான் வருகை தரவில்லை. உங்களில் யார் வேலுநாச்சி?, யார் ஜான்சி ராணி?, யார் கல்பனா சாவ்லா?, யார் இந்திராகாந்தி?, யார் சரோஜினி? என்று கண்டறியவே வந்து இருக்கிறேன். ஒரு சமுதாயம் தன் லட்சியத்தை அடைய வேண்டுமானால் அது இரண்டு சிறகுகளால் பறக்க வேண்டும். ஆண் ஒரு சிறகு; பெண் ஒரு சிறகு.

ஆண் என்ற ஒற்றை சிறகால் பறந்துகொண்டிருந்த சமூகம் இனி பெண்ணையும் சேர்த்து இரட்டை சிறகால் பறந்தாக வேண்டும். கல்லூரி கல்வி என்பது வெறும் முகவரி அட்டை; முகவரி அட்டை வீடாகிவிடமுடியாது. வாழ்க்கை கடலை கடப்பதற்கான நீச்சல் பயிற்சிதான் இப்போது நீங்கள் பெறும் கல்வி.

வெற்றி என்பது ஒரு பெருமரம்; ஆனால் தோல்விதான் அதற்கான உரம். சிறுசிறு தோல்விகளால் தவறான முடிவுக்கு சென்றுவிடாதீர்கள். பெற்றோர்கள் உங்கள்மீது பெருங்கனவு வைத்திருக்கிறார்கள். வெற்றி என்பது பெற்றுக்கொள்வது ஆகும். தோல்வி என்பது கற்றுக்கொள்வதாகும்.

பருவத்தின் வாசலில் நீங்கள் நிற்கிறீர்கள். இது ஒரு பரவசமான வயது. படபடக்கும் மனது. உங்கள்மீது பட்டாம்பூச்சிகள் படையெடுக்கும் பருவம் இது. கவனம்; காதல்போல் ஒன்று வரும். ஆனால் எது காதல்? எது இனக்கவர்ச்சி? என்பதை இனம் கண்டுகொள்ள ஒரு பக்குவம் வேண்டும்.

நான் காதலுக்கு நண்பன்; கவர்ச்சிக்கு பகைவன். இனக்கவர்ச்சி என்பது உங்கள் இதயத்தை சிதறச்செய்வது; காதல் என்பது உங்கள் இதயத்தை குவியவைப்பது. காதல் என்பது புரிதல், மதித்தல், நம்பிக்கை மற்றும் உற்சாகம். இரண்டுக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். தொழில்நுட்பம் உங்கள் கைகளில் கைப்பேசியை(செல்போன்) தந்து இருக்கிறது. வாழ்வுக்கு வரமும் அதுதான்; நேரத்துக்கு சாபமும் அதுதான். கைப்பேசி உங்களுக்கு வேலைக்காரனாய் இருக்க வேண்டுமே தவிர நீங்கள் அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

ஒரு கைப்பேசி என்பது கல்விக்கும், கலைக்கும், தகவலுக்குமான கருவிதானே தவிர, உங்கள் நேரத்தைக் கொல்லும் உயிர்க்கொல்லி அல்ல. வாரத்தில் ஒருநாள் கைப்பேசிக்கு விடுமுறை விட்டுப்பாருங்கள்; உங்கள் சிதறும் சக்தி சேமிக்கப்படும். தமிழகத்தில் பலகாலமாக பல பழமொழிகள் தவறாகவே புழங்கப்பட்டு வருகின்றன. ‘போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை; வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை‘ என்பவை பிழைபட்ட பழமொழிகள். ‘போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை; வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை‘ என்பதே சரி. அதேபோல் ‘பெண் புத்தி பின்புத்தி‘ என்று பலகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.

பெண்களே இந்த நிஜமற்ற பழமொழியின் மீது நெருப்புவையுங்கள். ‘பெண் புத்தி பின்புத்திதான்; பின்னால் வருவதை முன்கூட்டியே உணர்ந்து சொல்லும் புத்தி‘ என்று புதுஉரை எழுதுங்கள். வாழ்க்கை உங்களை அழைக்கிறது; வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.