பெரியாரின் தமிழ் தேசிய உணர்வை திசை திருப்புகிறார்கள் - கி.வீரமணி அறிக்கை


பெரியாரின் தமிழ் தேசிய உணர்வை திசை திருப்புகிறார்கள் - கி.வீரமணி அறிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2019 11:31 PM GMT (Updated: 14 Aug 2019 11:31 PM GMT)

‘பெரியார் ஊட்டிய தமிழ் தேசிய உணர்வை திசை திருப்புகிறார்கள்’ என்று கி.வீரமணி கூறி உள்ளார்.

சென்னை, 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல மதங்கள், பல மொழிகள், பல (கலாசாரங்கள்) பண்பாடுகள் கொண்ட இந்தியாவை ஒரே மதம்-இந்து மதம், ஒரே மொழி-பார்ப்பன சமஸ்கிருதம், இந்தி, ஒரே பண்பாடு-ஆரிய வேத மத சமஸ்கிருதப் பண்பாட்டினைத் திணிக்கும் ‘ஹிந்துத்துவா’ கொள்கையை, தனது நீண்ட கால கனவு திட்டங்களை மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜனதா அரசு நாடாளுமன்றத்தில் 35 நாட்களில் 32 மசோதாக்கள் நிறைவேற்றம் என்பது போன்று நாளும் செய்து வருவது கண்டு ஜனநாயக உலகம் திகைத்துப் போய் உள்ளது.

நம்மைப் பொறுத்தவரை, தந்தை பெரியார் மண்ணாகவும், பண்பாட்டுத் தளமாகவும், சமத்துவமும், சுயமரியாதையும் என்றும் பூத்துக்குலுங்கி, காய்த்துக்கனிந்துள்ள பண்பட்ட மக்கள் உள்ள நிலமாக தமிழ்நாடு விளங்குவதால், வடக்கின் வாடைக் காற்றை, தமிழ்நாடு தடுத்து நிறுத்தியது.

இதை இன எதிரிகள் புரிந்து கொண்டதால் திராவிடம் தமிழுக்கு எதிரி, திராவிடம் பேசுவோர் தமிழர் விரோதி என்று ஆரியமே ‘சடகோபம்’ சாத்தி சிலரைக் கிளப்பி விட்டுள்ளனர். திராவிடம் என்பது வெறும் நிலப்பரப்பாகுமா? அது அழியாத சமத்துவம், சுயமரியாதை என்பதுதான் திராவிடம். மீள் வரலாற்றை அது மட்டும் தான் தர முடியும். ஆரியத்தை, வீரியத்துடன் வீழ்த்துவது திராவிடம் என்பது புரியாததனால் சில அப்பாவிகள் பெரியார் ஊட்டிய தமிழ்த் தேசிய உணர்வை திசைத் திருப்பி எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் எண்ணி ஏமாறும் பரிதாப நிலை இருக்கிறது. அதுதான் மிகப்பெரும் ஆபத்து என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த எச்சரிக்கை காலத்தின் தேவை; ஏமாந்தால் இனம், மொழி, பண்பாடு நாகரிகம், சமத்துவம் எல்லாம் அழியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story