நீலகிரி, கோவை, தேனி மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


நீலகிரி, கோவை, தேனி மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:41 PM GMT (Updated: 14 Aug 2019 11:41 PM GMT)

தென்மேற்கு பருவகாற்று காரணமாக நீலகிரி, கோவை, தேனி மலைப்பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, தேனி, கோவை, நெல்லை, கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது.

அதன் தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் (வியாழக்கிழமை) மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு பருவகாற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிலும், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு (நாளை வரை) கனமழையும், தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் குமரிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று வரை) செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘பெரம்பலூர் 8 செ.மீ., வால்பாறை 7 செ.மீ., சின்னக்கல்லாறு, பெரியாறு தலா 6 செ.மீ., ஜி பஜார், அறந்தாங்கி, காரைக்குடி, தேவாலா, தேக்கடி, சீர்காழியில் தலா 4 செ.மீ., வெண்பாவூர், பரமக்குடி, நடுவட்டத்தில் தலா 3 செ.மீ., சிதம்பரம், சேலம், கூடலூர், ஆலங்குடி, பேச்சிப்பாறை, அதிராம்பட்டினத்தில் தலா 2 செ.மீ.’ உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

Next Story