பணம் கொடுக்காமல் செல்பி எடுக்க வந்தவரை திருப்பி அனுப்பிய வைகோ


பணம் கொடுக்காமல் செல்பி எடுக்க வந்தவரை திருப்பி அனுப்பிய வைகோ
x
தினத்தந்தி 15 Aug 2019 10:27 AM GMT (Updated: 15 Aug 2019 10:27 AM GMT)

பணம் கொடுக்காமல் செல்பி எடுக்க வந்தவரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பினார்.

ஆம்பூர்

கடந்த 8-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளருக்கு, கழகத் தோழர்கள் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம். கழகப் பொதுச்செயலாளருடன் செல்பி எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூபாய் 100/- வழங்க வேண்டும். கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஆம்பூருக்கு அண்மையில் வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ம.தி.மு.க தரப்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தொண்டர்கள் பலர் ஆர்வமுடன் அவருடன் செல்பி எடுத்தனர். போட்டோவுக்கு `போஸ்  கொடுத்த வைகோ 100 ரூபாயைக் கேட்டு பெற்றுக்கொண்டார். அப்போது தொண்டர் ஒருவர் 100 ரூபாய் இல்லாமல் போட்டோ எடுக்க வைகோ அருகில் சென்றார். ஆனால் அந்த தொண்டரிடம் ரூபாய் இல்லை எனத் தெரிந்ததும் வைகோ போட்டோ எடுக்க மறுத்துவிட்டார். இதனால் அந்த தொண்டர் வருத்தத்துடன் திரும்பிச் சென்றார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story