மாநில செய்திகள்

அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரி பொதுநல வழக்கு; நாளை விசாரணை + "||" + Case trial to extend of the vision days of the Attivaratar tomorrow

அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரி பொதுநல வழக்கு; நாளை விசாரணை

அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரி பொதுநல வழக்கு; நாளை விசாரணை
அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரிய பொதுநல வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
சென்னை,

சர்வதேச ஸ்ரீ வைஸ்னவா ராமானுஜா சாம்ராஜ்ய சபாவின் தலைவர் சுவாமி கோவிந்தா ராமானுஜ தாசா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி மீண்டும் குளத்துக்குள் வைக்கப்பட உள்ளது.

அத்திவரதர் தரிசனம் குறித்து பத்திரிகைகளில், ஊடகங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளியாகின. அதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்து விட்டனர்.

பக்தர்களின் கூட்டம் இன்னமும் குறையவில்லை. எனவே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் அரை மண்டலத்துக்கு (24 நாட்களுக்கு) நீட்டிக்க வேண்டும். அதாவது வருகிற செப்டம்பர் 10-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை மனுவை கொடுத்தேன்.

தமிழக அரசும், இதுகுறித்து பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க இருந்தது. ஆனால், தென்கலை சம்பிரதாயத்துக்கு எதிராக செயல்படும் சின்ன காஞ்சீபுரம் தாத்தாச்சாரியர்கள், தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க விடாமல் தடுத்து விட்டனர். மேலும், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு முதல்-அமைச்சர் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தரிசனத்தை நீட்டிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சீபுரம் கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் எம்.மகாராஜா, ‘அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. மேலும் வருகிற 17-ந்தேதி திட்டமிட்டபடி அத்திவரதர் சிலை குளத்துக்குள் வைக்கப்படும். தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை திட்டவட்டமாக அறிவித்து விட்டது’ என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘இதுபோன்ற வழக்கை பொதுநல வழக்காகத்தான் தாக்கல் செய்ய முடியும்’ என்றார். அதற்கு மனுதாரர் தரப்பில், இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கூறப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கை திரும்ப பெற அனுமதித்து, அதை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வசந்தகுமார் என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.  அவர் தனது மனுவில், அத்திவரதர் சிலையை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என ஆகம விதி ஏதும் இல்லை என தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.