மாநில செய்திகள்

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் புறக்கணிப்பு + "||" + Ignoring gram sabha meetings

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் புறக்கணிப்பு

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் புறக்கணிப்பு
திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த பூவலை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு உள்ள இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கான சுடுகாடு பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி பூவலை ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். இதனால் அங்கு கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

தொழிற்பூங்கா வேண்டாம்

கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த மாநெல்லூர் மற்றும் சூரப்பூண்டி கிராமங்களில் சுமார் 286 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைய உள்ள தொழிற்பூங்கா குறித்து மாதர்பாக்கத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த தொழிற்பூங்காவில் அமைய உள்ள ராசாயண தொழிற்சாலைகளால் சுற்று வட்டார கிராமங்கள் பாதிக்கப்படும். ஏற்கனவே கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள தொழிற்பூங்கா பல இருக்கும் போது கிராம புற விவசாயத்தையும், பொதுமக்களின் நலனையும் பாதிக்கும் மேற்கண்ட தொழிற்பூங்கா வேண்டாம் என பொதுமக்கள் தங்களது கடுமையான எதிர்ப்பை ஒட்டு மொத்தமாக பதிவு செய்திருந்தனர்.

முறையான தகவல் இல்லை

இந்த நிலையில், மாநெல்லூரில் அமைய உள்ள தொழிற்பூங்கா கருத்து கேட்ட பிறகு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அந்த திட்டம் கைவிடப்பட்டதா? அதற்கான ஆய்வறிக்கை எப்போது எடுக்கப்பட்டது? தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்குரிய நீர் ஆதாரம் குறித்து முறையான தகவல் இல்லை.

இந்தநிலையில் குழப்பமான அந்த செயல் திட்டம் குறித்து யாருக்கும் எதுவும் புரியவில்லை என்றும், இதுகுறித்து உள்ளூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டால் கூட இதற்கான தெளிவான பதில் இல்லை என கிராம சபை கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.

கிராம மக்கள் வெளிநடப்பு

எனவே மாநெல்லூர் கிராமத்தில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல ஏடூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாலை, கழிவறை, ஏரி தூர் வாருதல் போன்ற அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக செய்திடவில்லை என்று புகார் கூறி அதிகாரிகளிடம் கிராம மக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி ராம்குமார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

முறையான கணக்கு இல்லை

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் சந்திரபாபு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பற்றாளராக மோகன்ராஜ் கலந்து கொண்டார். அப்போது கிராம மக்கள் 2018-2019-ம் ஆண்டில் ரூ.30 லட்சத்து 998 செலவு செய்ததற்கு முறையான கணக்கு இல்லை என்று கூறினர்.

இதற்கு உரிய முறையில் விளக்கம் அளிக்க வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலர் கூட்டத்திற்கு வரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கிராமசபை கூட்டம் தள்ளி வைப்பு

ஆனால், பற்றாளர் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வர இயலாது. கூட்டத்தை நடத்துவோம். பின்னர், இதுகுறித்து விவாதிப்போம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் கூச்சல் போட்டதால் கிராமசபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இருப்பினும், ஊராட்சி செயலாளரும், பற்றாளரும் ஒரு சிலரிடம் கையொப்பம் வாங்க முயற்சித்தனர். இதனால் கிராம மக்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து பற்றாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தை தள்ளி வைப்பதாக கூறி விட்டு பற்றாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

கிராமசபை கூட்டம் நடத்த வேண்டாம்

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், பெரிய அருங்கால், சின்ன அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் பணி மேற்பார்வையாளர் சரவணகுமார் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது.

கூட்டம் தொடங்கிய உடன் கிராம மக்கள் அனைவரும் ஊராட்சி செயலாளர் லீமா எபினேசரிடம் வனத்துறை கட்டுப்பாட்டில் வரும் அருங்கால்காட்டூர் சாலை சீரமைக்கும் வரையிலும், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தும் வரை எங்கள் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டாம் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கூட்டத்தில் இருந்து எழுந்து சென்றனர். இதன் பின்னர் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை இதனால் அருங்கால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேறொரு நாளில் நடத்தப்படும்

இதனையடுத்து 3 மணிநேரம் கழித்து மீண்டும் கீரப்பாக்கம் பகுதியில் கிராம சபை கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் பொதுமக்கள் யாரும் கூட்டத்திற்கு வருவதற்கு விரும்பாததால் அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடத்தும் முயற்ச்சியை கைவிட்டனர்.

கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்ட கீரப்பாக்கம் கிராம சபை கூட்டம் வேறொரு நாளில் நடத்தப்படும் என்று ஊராட்சி செயலர் லீமா எபினேசர் தெரிவித்தனர்.

கல்குவாரியை மூடும் வரை...

காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 59 ஊராட்சிகளில் 58 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஆனைக்குன்றம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு நேற்று காலை ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணனும், பற்றாளர் ரம்யாவும் தயாராக காத்திருந்தனர்.

அப்போது பொதுமக்கள் அங்கு வந்து கிராம சபை கூட்டம் நடத்த கூடாது. ஏற்கனவே இந்த ஊராட்சியில் கல் குவாரிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது எனவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பல கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் போட்டும் அது இதுவரை செயல்படுத்தவில்லை. கல்குவாரியை மூடும் வரை கிராமசபையை நடத்த கூடாது என கூறினர்.

இதனால் ஒரத்தி போலீசார் அங்கு வந்தனர். கிராமசபை நடத்த கூடாது என யாரும் தடுக்க முடியாது என கூறினர். இதனால் பொதுமக்கள் கல்குவாரியை மூடும் வரை நாங்கள் கிராம சபையை புறக்கணிக்கிறோம் என கூறி விட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறி விட்டு அதிகாரிகள் சென்று விட்டனர். இதனால் பொதுமக்கள் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அளித்தால் உடனே அடிப்படை அத்தியாவசிய பணிகள் செய்யப்படும் என அதிகாரிகள் கூறி விட்டு சென்றனர்.