சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது


சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
x
தினத்தந்தி 15 Aug 2019 10:30 PM GMT (Updated: 15 Aug 2019 6:59 PM GMT)

சுதந்திர தினத்தை யொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார்.

சென்னை, 

தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொள்வதற்காக தனது இல்லத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு கோட்டைக்கு வந்தார்.

கோட்டை அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களில் புடைசூழ அழைத்து வந்தனர். காலை 8.48 மணிக்கு கோட்டை கொத்தளத்தின் முன்பாக அமைக்கப்பட்டு இருந்த அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்திறங்கினார்.

வரவேற்பு

அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் கே.ஜே.குமார், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ நிலைய அதிகாரி பிரிகேடியர் விக்ரம் சிங், தாம்பரம் விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எம்.எஸ்.அவானா, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பரமேஷ், தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்துவைத்தார்.

அணிவகுப்பு மரியாதை

பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலாளர் அழைத்துச்சென்றார். அங்கிருந்தபடி காவல்துறையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை அவர் சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் திறந்த ‘ஜீப்’பில் ஏறிச்சென்று, சாலை ஓரத்தில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த காவல்துறையின் கமாண்டோ படையினர், குதிரைப் படையினர், நீலகிரி படைப்பிரிவினர், மாநில காவல் வாத்தியக்குழுவினர் ஆகியோரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் கூடியிருந்த மாணவர்கள், பொதுமக்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் ‘ஜீப்’பில் அணிவகுப்பு தலைவரும் சென்றார்.

தேசிய கொடி ஏற்றினார்

பின்னர் 8.59 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது அனைவரும் எழுந்து நின்றனர். 9 மணிக்கு அங்கிருந்த மூவர்ண தேசிய கொடியை முதல்-அமைச்சர் ஏற்றினார். அப்போது கொடியில் இருந்து ரோஜா மலர் இதழ்கள் சிந்தின. மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. கொடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சல்யூட் அடித்து வணக்கம் செலுத்தினார்.

அப்போது காவல்துறையின் கூட்டுக்குழல் இசைக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்தபடி 9.02 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திரதின உரை ஆற்றினார். 9.25 மணிவரை அவரது உரை நீடித்தது.

விருதுகள்

அப்போது, வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதியம், சிறப்பு ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட புதிய அறிவிப்புகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் விருது பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து அங்கு போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு அவர் இனிப்புகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து 9.45 மணிக்கு கோட்டையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். அப்போது பொதுமக்களுக்கு, காரில் இருந்தபடி கையசைத்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

கலந்துகொண்டோர்

இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே பந்தல்கள் போடப்பட்டிருந்தன. அங்கு முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஐகோர்ட்டு மற்றும் கீழமை கோர்ட்டு நீதிபதிகள், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசு ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story