தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது ஒரு பவுன் ரூ.28,944-க்கு விற்பனை


தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது ஒரு பவுன் ரூ.28,944-க்கு விற்பனை
x
தினத்தந்தி 15 Aug 2019 10:15 PM GMT (Updated: 15 Aug 2019 7:03 PM GMT)

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 944-க்கு விற்பனை ஆனது.

சென்னை, 

தங்கம் விலை கடந்த 2 மாதங்களில் வரலாறு காணாத உயர்வை சந்தித்து இருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு பவுன் ரூ.26 ஆயிரம் என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2-ந் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்து 64-ஐ கடந்தது.

அதன் தொடர்ச்சியாகவும் விலை உயர்ந்து, கடந்த 7-ந் தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. அதற்கு அடுத்த 5 நாட்களில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து, ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை நேற்று முன்தினம் சரிவை சந்தித்தது. பவுனுக்கு ரூ.392 குறைந்து, ஒரு பவுன் மீண்டும் ரூ.28 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.

மீண்டும் உயர்ந்தது

விலை குறைந்த மறுநாளே நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 578-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 624-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 618-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 944-க்கும் விற்பனை ஆனது.

பங்கு சந்தை வீழ்ச்சி

தங்கம் விலை குறைந்து மீண்டும் உயர்ந்தது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சீனா மீது விதித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்வு செய்வதாக அறிவித்ததால், தங்கம் விலை குறைந்தது. ஆனால் நேற்று (நேற்று முன்தினம்) அமெரிக்க பங்குசந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்ததால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இதன் காரணமாக விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அமெரிக்க பங்குசந்தை வீழ்ச்சி அடைந்தால், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும்’ என்றனர்.

வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து இருந்தது. கிராமுக்கு 80 காசும், கிலோவுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் 48 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story