பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது


பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது
x
தினத்தந்தி 15 Aug 2019 11:15 PM GMT (Updated: 15 Aug 2019 7:13 PM GMT)

தமிழக மீன்வளத்துறை பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருதை, சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை, 

தமிழக மீன்வளத்துறை பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருதை, சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கொள்ளையர்களை விரட்டி அடித்த தம்பதியும் விருது பெற்றனர்.

விஞ்ஞானி கே.சிவனுக்கு விருது

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கினார்.

இதில் உயரிய விருதான டாக்டர் அ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது, இந்திய விண்வெளி ஆய்வு (இஸ்ரோ) நிறுவனத்தின் தலைவர் விஞ்ஞானி கே.சிவனுக்கு வழங்கப்பட்டது. (கே.சிவன் வரவில்லை என்பதால் அந்த விருதை அவர் பின்னர் நேரடியாக முதல்-அமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டது).

இந்த விருது, ரூ.5 லட்சம் தொகை, 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

கல்பனா சாவ்லா விருது

அடுத்த உயரிய விருதான கல்பனா சாவ்லா விருது, துணிவு மற்றும் சாகசச் செயலில் ஈடுபடும் பெண்ணுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ப.ரம்யா லட்சுமிக்கு இந்த விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த விருதும் ரூ.5 லட்சம் தொகை, தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

நெல்லை தம்பதி

அதீத துணிவுக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு விருது திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தில் வசிக்கும் பெ.சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு வழங்கப்பட்டது.

இரண்டு முகமூடி கொள்ளையர்கள் அரிவாளால் தாக்க முயன்றபோது அவர்களை துணிச்சலோடு எதிர்கொண்டு, உயிரை பொருட்படுத்தாமல் சாதுரியமாக திருப்பி தாக்கி விரட்டினர். இந்த துணிச்சலான செயல், மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், அநீதியைக் கண்டு போராடும் மனபான்மையை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. எனவே அவர்கள் இரண்டு பேருக்கும் அதீத துணிவுக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. (இந்த விருது, இந்த ஆண்டிற்கு மட்டும் சிறப்பாக உருவாக்கப்பட்ட விருதாகும்).

நல்ஆளுமை விருதுகள்

அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது சென்னை காவல் ஆணையரகத்துக்கு வழங்கப்பட்டது. விருதை, முதல்-அமைச்சரிடம் இருந்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார்.

மற்றொரு முதல்-அமைச்சரின் நல்ஆளுமை விருது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறைக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

அடுத்த முதல்-அமைச்சரின் நல்ஆளுமை விருது, வணிக வரித்துறைக்கு வழங்கப்பட்டது. விருதை அமைச்சர் வீரமணி பெற்றுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உடல் நலனுக்காக சென்னை சாந்தோமில் உணர்வுப் பூங்காவை (இன்பினிட்டி பூங்கா) அமைத்ததற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொண்டு நிறுவனம்

சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை, சென்னை வேப்பேரியில் உள்ள ஆப்பர்சூனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பள்ளி பெற்றது.

சிறந்த மருத்துவருக்கான விருது, கோவையில் உள்ள முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் செ.வெற்றிவேல் செழியன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் வீ.ரமாதேவி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எவரெஸ்ட் ஸ்டெபிலைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த சமூக பணியாளர் விருது, சென்னை திருவான்மியூரில் உள்ள பாத் வே சேபின் இணை நிறுவனர் சந்திரா பிரசாத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருதை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெற்றது. மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளர்களுக்கான விருதை கன்னியாகுமரி மாவட்டம் எம்.சூசை மரியான், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை சேலம் போதி மரம் தொண்டு நிறுவனம் ஆகியோர் பெற்றனர்.

உள்ளாட்சி அமைப்புகள்

அதைத் தொடர்ந்து சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சரின் விருதுகள் வழங்கப்பட்டன. சேலம் சிறந்த மாநகராட்சியாக தேர்வு பெற்று ரூபாய் 25 லட்சம் விருது பெற்றது. சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு தர்மபுரி (ரூ.15 லட்சம்), 2-ம் பரிசு வேதாரண்யம் (ரூ.10 லட்சம்), 3-ம் பரிசு அறந்தாங்கி (ரூ.5 லட்சம்) ஆகிய நகராட்சிகள் பெற்றன.

சிறந்த பேரூராட்சிகளுக்கான முதல் பரிசை மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி (ரூ.10 லட்சம்), 2-ம் பரிசை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சி (ரூ.5 லட்சம்), 3-ம் பரிசை ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பேரூராட்சி (ரூ.3 லட்சம்) ஆகியவை பெற்றன.

சிறந்த இளைஞர் விருது

முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதை, ஆண்கள் பிரிவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெ.நவின்குமார் (பல பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை மாற்றியவர்), திண்டுக்கல் மாவட்டம் மு.ஆனந்த குமார் (6 ஆயிரம் பேர் கொண்ட ரத்ததானம் செய்வோரின் குழுவை உருவாக்கியவர், பாரதமாதா நிறுவனம் மூலம் ஆதரவற்றோருக்கு உணவு அளிப்பவர்) ஆகியோர் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் மதுரை மாவட்டம் ரா.கலைவாணி (முதியோரின் அவல நிலையை நீக்குபவர், அனாதைப் பிணங்களுக்கு இறுதிச்சடங்கு செய்பவர், ஆதரவற்றோரை இல்லங்களில் சேர்ப்பதோடு, அவர்களை குடும்பங்களுடன் இணைத்து வைப்பவர்) விருது பெற்றார்.

Next Story