தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 15 Aug 2019 7:16 PM GMT)

கிழக்கில் இருந்து காற்று அதிகம் வீச இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு (நாளையும், நாளை மறுதினமும்) மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவகாற்று காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது.

அதுதவிர, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெப்பசலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு (நாளையும், நாளை மறுதினமும்) மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

2 நாட்களுக்கு பரவலாக மழை

மேற்கில் இருந்து வீசிய காற்றினால் கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கு ஓரளவு மழை இருந்தது. தற்போது அந்த காற்று குறைந்துவிட்ட நிலையில், வருகிற 17-ந் தேதி முதல் கிழக்கில் இருந்து காற்று அதிகம் வீச இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 17 (நாளை) மற்றும் 18-ந் தேதி (நாளை மறுதினம்) ஆகிய 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென்மேற்கு பருவகாற்று காரணமாக நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

தேவாலா 9 செ.மீ., தாமரைப்பாக்கம் 7 செ.மீ., திருத்தணி, தருவளங்காடு, சோழவரம், அரக்கோணத்தில் தலா 6 செ.மீ., சின்னக்கலாறு 5 செ.மீ., செங்குன்றம் 4 செ.மீ., நடுவட்டம், ஜி பஜார், பள்ளிப்பட்டு, வால்பாறை, பூண்டி, மாதவரத்தில் தலா 3 செ.மீ., செம்பரம்பாக்கம், அறந்தாங்கி, பொன்னேரியில் தலா 2 செ.மீ., புதுக்கோட்டை, வடசென்னை, கோத்தகிரி, போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், சத்யபாமா பல்கலைக்கழகம், காவேரிப்பாக்கம், இளையான்குடி, அண்ணா பல்கலைக்கழகம், அரிமளம், திருவள்ளூர், பூந்தமல்லி, திருமயம், பெரியார், கமுதியில் தலா ஒரு செ.மீ.

Next Story