போதையில் கல்லூரிக்கு வந்ததால் ஐகோர்ட்டு நூதன தண்டனை: காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்த 8 மாணவர்கள்


போதையில் கல்லூரிக்கு வந்ததால் ஐகோர்ட்டு நூதன தண்டனை: காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்த 8 மாணவர்கள்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 15 Aug 2019 8:10 PM GMT)

மது போதையில் கல்லூரிக்கு வந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு அளித்த நூதன தண்டனையின்படி, விருதுநகரில் காமராஜர் இல்லத்தை 8 மாணவர்கள் நேற்று சுத்தம் செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மது போதையில் வகுப்புக்கு வந்த 8 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த மாணவர்கள், தங்களது படிப்பை தொடர கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, “மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இருந்தாலும் 8 மாணவர்களும் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளதால் அவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. எனவே, 8 மாணவர்களும் சுதந்திர தினத்தன்று விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணியை செய்ய வேண்டும். அங்கு வரும் பார்வையாளர், பொதுமக்களுக்கு உதவி செய்வதுடன், மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை மது ஒழிப்பு பிரசார அட்டைகளுடன், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்” என்று நூதன தண்டனை அளித்து உத்தரவிட்டது.

மேலும் மாணவர்கள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்வதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்காணித்து, ஐகோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும், கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவர்களை கண்காணித்து கல்லூரி முதல்வரிடம் அறிக்கை அளிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

சுத்தம் செய்யும் பணி

ஐகோர்ட்டு உத்தரவின்படி நேற்று அந்த மாணவர்கள் 8 பேரும், காலை 10 மணி முதல் காமராஜர் இல்லத்தில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். அங்கு வந்த பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்தனர். மேலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மதுவிலக்கு பிரசாரத்தையும் மேற்கொண்டனர்.

மாணவர்கள் பணிகளை விருதுநகர் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் கல்லூரி பேராசிரியர் சரவணன் ஆகியோர் கண்காணித்தனர்.

Next Story