சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி நாளை நடக்கிறது


சென்னையில் பழமையான கார்கள் கண்காட்சி நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 16 Aug 2019 9:05 PM GMT (Updated: 16 Aug 2019 9:05 PM GMT)

பழமையான கார்கள் கண்காட்சி, சென்னையில் நாளை நடக்கிறது.

சென்னை,

சென்னையில், பாரம்பரியம் மிகுந்த பழைய கார்களின் கண்காட்சி, கடந்த 13 வருடங்களாக நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பாரம்பரியம் மிகுந்த பழைய கார்களின் கண்காட்சி, சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கண்காட்சியை நாளை காலை 9 மணிக்கு நடிகை ரேவதி தொடங்கி வைக்கிறார். டாக்டர் வி.சுமந்திரன் சிறப்புரை ஆற்றுகிறார். “சென்னையில் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் போக்குவரத்து” என்ற தலைப்பில் அவர் பேசுவார்.

பழமையான மற்றும் புராதனமான 140-க்கும் மேற்பட்ட கார்களும், 40-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் கண்காட்சியில் பங்கு பெற உள்ளன. 1920 முதல் 1970-ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார், எம்.ஜி. டார்ஜ் பிரதர்ஸ், செவர்லெட், போர்டு, பியட், ஆஸ்டின் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற நிறுவனங்களின் சிறந்த பராமரிப்பில் உள்ள வாகனங்கள் பங்கு பெறுகின்றன. சிறப்பாக பராமரிக்கப்பட்ட வாகனங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 1957 மாடல் டாட்ஜ் கிங்க்ஸ்வே கார், ஏவி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனர் ஏவி.மெய்யப்பன் பயன்படுத்திய 1938 மாடல் வாக்ஸால் கார், ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனின் 1956 மாடல் வாக்ஸால் வெலாக்ஸ் கார் போன்றவையும் பங்கு பெறுகின்றன.

ராஜாமுகர்ஜி, பார்த்தா பானிக் ஆகிய இருவரும் நடுவராக இருந்து பரிசுக்குரியவர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

Next Story