மாநில செய்திகள்

வாகன சட்டங்களை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை + "||" + Vehicle laws The Government of Tamil Nadu has been hardened If driving at high speed Sentenced to 2 years

வாகன சட்டங்களை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை

வாகன சட்டங்களை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை
விபத்தினால் ஏற்படும் உயிர்ப்பலியை தடுக்கும் வகையில் வாகன சட்டங்களை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது. அதன்படி வாகனங்களை அதிவேகமாக ஓட்டினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளினால் அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு தற்போது வாகன சட்டங்களை கடுமையாக்கி உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


பேருந்துகள், சிற்றுந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிக வேகமாகவும், அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

1988-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின் 183-ம் பிரிவின்படி அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் முதல் முறை செய்யும் குற்றத்திற்கு ரூ.400 அபராதமும், இரண்டாவது முறை செய்யும் குற்றத்திற்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், மேலும் இவ்வாகனத்தின் உரிமையாளருக்கு, வேகமாக ஒட்ட அனுமதித்த குற்றத்திற்காக ரூ.300-ம், மறுமுறை அதே குற்றம் இழைக்கப்பட்டால் ரூ.500-ம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் இயக்கினால், மோட்டார் வாகன சட்டத்தின் 184-ம் பிரிவின்படி முதல் முறை குற்றத்திற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதகால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வகை குற்றங்களுக்கு முதலில் குற்றம் செய்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அதே குற்றத்தை இரண்டாவது முறை மற்றும் அதற்கடுத்த முறைகளில் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதியிட்ட அறிவிப்பின்படி, போக்குவரத்து வாகனங்கள், (பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட) வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இயக்கப்படும் நிலையில் இருக்க வேண்டும்.

போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் தணிக்கையின்போதோ அல்லது தகுதிச்சான்று பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களுக்கு வரும்போதோ, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாமலோ, அல்லது அக்கருவி இயங்காமல் உள்ளது கண்டறியப்பட்டால் அவ்வாகனத்தின் அனுமதிச்சீட்டின் (பெர்மிட்) மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதிச் சீட்டின்படி அனு மதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக ஆட்களை ஒப்பந்த ஊர்திகள் ஏற்றிச்செல்வது தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள்-1989, விதி 177(1)-ன்படி நபருக்கு ரூ.100 வீதம் அபராதம் மற்றும் அனுமதிச் சீட்டின் மீது நடவடிக்கை எடுக்கும் குற்றமாகும்.

மேலும் பேருந்துகளில் அதிக ஆட்களை ஏற்றிச்சென்றால், அனுமதிச்சீட்டு தற்காலிக தடை (அதிக பட்சம் 30 நாட்களுக்கு) அல்லது ரூ.9 ஆயிரம் வரை இணக்க கட்டணம் வசூலிக்க 1989-ம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன விதி பிரிவு 206-ன் கீழ் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகள், வாகனங்களின் அதிகவேகத்தாலும், பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதாலும் ஏற்படுகிறது. எனவே, அவ்வகை வாகனங்களின் அனுமதிச்சீட்டின்மீது நடவடிக்கையும், அவ்வாகனத்தை இயக்கிய ஓட்டுனரின் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு குறையாமல் தற்காலிக தகுதியிழப்பும் செய்யப்படும்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, மேற்காணும் குற்றங்கள் கண்டறியப்பட்டால், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வாகனத்தை பொதுச்சாலையில் இயக்கும்போது, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்திலும், அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் ஏற்றிச்சென்று பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இதுசம்பந்தமாக பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் அவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 5430 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.