இனி 2059-ம் ஆண்டுதான் அத்திவரதர் தரிசனம்


இனி 2059-ம் ஆண்டுதான் அத்திவரதர் தரிசனம்
x
தினத்தந்தி 16 Aug 2019 11:15 PM GMT (Updated: 16 Aug 2019 10:44 PM GMT)

ஒரு மண்டலமாக (48 நாட்கள்) நாடு முழுவதும் உள்ள ஆன்மிக வாதிகளை காஞ்சீபுரத்தில் சங்கமிக்க செய்தவர். இதனால் காஞ்சீபுரம் நகரமே கடந்த 1½ மாதங்களாக விழாக்கோலம் பூண்டிருந்த காட்சியே அதற்கு சாட்சி.

இனி 40 ஆண்டுகளுக்கு பிறகு தான் அத்திவரதர் தரிசனம் கிடைக்கும். வாழ்வில் காணக்கிடைக்காத அரிய பாக்கியம் இதுவென்பதால், கடந்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் இத்தனை நாள் வரை லட்சக்கணக்கான பேர் காஞ்சீபுரம் நோக்கி பக்தியோடு படையெடுத்தனர். திசை எட்டும் இருந்து பக்தர்களை காந்தம் போல் ஈர்த்த அத்திவரதர், கடந்த 47 நாட்களாக அவர்களுக்கு தரிசனம் அளித்து அருள்பாலித்த நிலையில், இன்று மீண்டும் குளத்திற்குள் துயில்கொள்ள செல்ல இருக்கிறார்.

இனி 2059-ம் ஆண்டு தான் அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். அதற்கு இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

கடந்த முறை (1979-ம் ஆண்டு) அத்திவரதர் காட்சி தந்தபோது, சுமார் 10 லட்சம் பக்தர்கள் வந்து தரிசித்து சென்றதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்போது இருந்த தகவல் தொடர்பு வசதி குறைவுதான்.

ஆனால், இந்த முறை அப்படி அல்ல. தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து இருக்கிறது. எந்தவொரு தகவலும், அடுத்த சில வினாடிகளிலேயே பெரும்பாலானவர்களை சென்றடைந்து விடுகிறது. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் இந்த முறை அத்திவரதரை காணவந்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டது.

1979-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அத்திவரதரின் புகைப்படங்கள் கருப்பு-வெள்ளை நிறத்திலேயே இருந்தன. அதுவும் குறைந்த அளவு படங்களே எடுக்கப்பட்டு இருந்தன. ஆனால், இந்த முறை வண்ண.. வண்ண.. பட்டு ஆடையில் ஜொலித்த அத்திவரதரின் புகைப்படங்கள் சயன கோலத்திலும், நின்ற நிலையிலும் வெளியாகி விற்பனையிலும் சாதனை படைத்தன. இனி எல்லோரது இல்லங்களிலும் அத்திவரதர் நீக்கமற நிறைந்திருப்பார்.

அடுத்து 2059-ம் ஆண்டு காட்சி கொடுக்க அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வரும்போது, நாடு எந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டியிருக்கும்?, குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும்? என்பதை யூகிப்பது கடினம் தான். இந்த முறை அத்திவரதரை கண்டவர்கள், அடுத்த முறையும் அவரை தரிசிப்பதற்கான பாக்கியத்தை பெற வாழ்க்கையில் நீண்ட (40 ஆண்டுகள்) பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த பாக்கியம் கிடைக்க அத்திவரதர் அருள்பாலிக்கவேண்டும்.

Next Story