தாளவாடி அருகே கட்டுக்கட்டாக ரூ.3 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்


தாளவாடி அருகே கட்டுக்கட்டாக ரூ.3 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Aug 2019 11:45 PM GMT (Updated: 17 Aug 2019 9:48 PM GMT)

தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் கட்டுக்கட்டாக ரூ.3 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு,

தமிழக-கர்நாடக எல்லையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அமைந்துள்ள கிராமம் அட்டுகுழிபுரம். இங்கு கர்நாடக மாநிலம் ராமசமுத்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தியபோது, அதில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.

இதைத்தொடர்ந்து அந்த ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் 3 அட்டை பெட்டிகள் இருந்தது. அந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் கொண்ட 3 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் பிடியில் சிக்கியவர் கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 35) என தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கார்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 3 கோடி ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பின்னர் அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், ‘கடந்த வாரம்தான் மாண்டியா பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து ஆட்டோ ஓட்டி வந்தேன். இன்று (அதாவது நேற்று) பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்று ஆட்டோவின் உரிமையாளர் என்னிடம் கூறினார்.

அதன்பேரில் பொருட்களை ஏற்றிக்கொண்டு தமிழக பகுதிக்கு வந்தேன். என்னுடன் 2 பேர் வந்தனர். அட்டுகுழிபுரம் பகுதியில் போலீசார் சோதனையிட்டபோதுதான் ஆட்டோவில் கள்ளநோட்டுகள் இருப்பதே எனக்கு தெரிய வந்தது’ என்றார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். கள்ளநோட்டுகளை தமிழகத்தின் எந்த பகுதியில் புழக்கத்துக்கு விடுவதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story