வேலூரில் 3வது நாளாக தொடர்ந்து கனமழை


வேலூரில் 3வது நாளாக தொடர்ந்து கனமழை
x
தினத்தந்தி 18 Aug 2019 3:26 AM GMT (Updated: 18 Aug 2019 3:26 AM GMT)

வேலூரில் 3வது நாளாக தொடர்ந்து இன்றும் கனமழை பெய்து வருகிறது.

வேலூர்,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக மழை கொட்டினாலும் வேலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் வேலூரில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

அதன்பின்பு நேற்று அதிகாலை வரை விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழையால் வேலூர் மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. புதிய பஸ் நிலையம், கிரீன் சர்க்கிள் உள்ளிட்ட மாநகரின் முக்கிய சாலைகள் மழைநீர் ஆறுபோன்று ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

கன்சால்பேட்டை, இந்திராநகர், திடீர்நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. அங்குள்ள வீடுகளுக்குள் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது. அதில் இருந்தவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.

மழையால் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவில் உள்ள வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டான்சி நிறுவனத்தின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது.

இதேபோல் காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, அரக்கோணம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகத்தில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தில் பரவலாக இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  இதேபோன்று வேலூரில் 3வது நாளாக தொடர்ந்து இன்றும் கனமழை பெய்து வருகிறது.

Next Story