மோடியை ஆதரிக்க வேண்டிய நிலையில் ப.சிதம்பரம் உள்ளார் - முத்தரசன்


மோடியை ஆதரிக்க வேண்டிய நிலையில் ப.சிதம்பரம் உள்ளார் - முத்தரசன்
x
தினத்தந்தி 18 Aug 2019 7:31 PM GMT (Updated: 18 Aug 2019 9:24 PM GMT)

மோடியை ஆதரித்து பேச வேண்டிய நிலையில் ப.சிதம்பரம் இருப்பதாக கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க பெற்ற வெற்றியை, ஜனநாயகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் விரோதமான முறையில் மத சார்பின்மை கொள்கைக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள நீட், இந்தி திணிப்பு, உணவு பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு இசைவாக தமிழக அரசு  தலை ஆட்டுகிறது.

மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மோடியின் மூன்று கருத்துகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் வரவேற்கத்தக்க வகையில் புதிதாக எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியிருப்பதில் இருந்து எதோ சில காரணங்களுக்காக மோடியை ஆதரிக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. அது என்ன காரணம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்” என்று கூறினார்.

மேலும் பால் விலைவேற்றம் குறித்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story