மாநில செய்திகள்

2-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி சாவு வேதனையில் தாயும் தற்கொலை + "||" + Jumping from the 2nd floor The merchant dies The mother is also suicidal

2-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி சாவு வேதனையில் தாயும் தற்கொலை

2-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி சாவு வேதனையில் தாயும் தற்கொலை
நெல்லையில் 2-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி பரிதாபமாக இறந்தார். இதனால் வேதனை அடைந்த அவருடைய தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). இவருடைய மனைவி தங்கம் (60). இவர்களுக்கு கருத்தப்பாண்டி, சுடலையாண்டி (35), முத்துபாண்டி ஆகிய 3 மகன்கள். சுடலையாண்டி, கேரள மாநிலத்தில் மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று, கருப்புக்கட்டி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், கல்பனாதேவி (10), மல்லிகா (8) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கல்பனாதேவி 6-ம் வகுப்பும், மல்லிகா 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலையாண்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். நேற்று காலையில் சண்முகம் தன்னுடைய மகன் சுடலையாண்டியை சிகிச்சைக்காக, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பஸ்சில் அழைத்து சென்றார்.

அவர்கள் 2 பேரும் நெல்லையில் இருந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு டவுன் பஸ்சில் சென்றனர். பாளையங்கோட்டை மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், சுடலையாண்டி பஸ்சில் இருந்து வேகமாக கீழே இறங்கி ஓடினார். அவர் அங்குள்ள ஒரு கடையின் 2 மாடி கட்டிடத்தின் உச்சிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த சுடலையாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சுடலையாண்டி தற்கொலை செய்த சம்பவம் குறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த சுடலையாண்டியின் தாயார் தங்கம் வேதனை அடைந்தார். அவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கத்தின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடியில் இருந்து குதித்து கருப்புக்கட்டி வியாபாரி இறந்ததும், மகன் இறந்த வேதனையில் தாய் தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.