மத உணர்வை தூண்டும்படி பேசியதாக புகார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீசார் சம்மன்


மத உணர்வை தூண்டும்படி பேசியதாக புகார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீசார் சம்மன்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:21 PM GMT (Updated: 19 Aug 2019 11:21 PM GMT)

மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக வந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

காஞ்சீபுரத்தை சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் சையது அலி என்பவர் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு ஆன்லைன் மூலம் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில், “அத்திவரதர் குறித்து கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது. கடந்த காலங்களில் முகலாய படைகளுக்கு பயந்து அத்திவரதரை மறைத்து வைத்ததாகவும் தற்போது அந்த சூழ்நிலை இல்லை என்றும் ஜீயர் தெரிவித்துள்ளார். இது மத உணர்வை தூண்டும் வகையில் உள்ளது“ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வருகிற 22-ந்தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி ஜீயர் சடகோப ராமானுஜருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில், ஜீயர் சார்பில் விசுவ இந்து பரிஷத் மாநில இளைஞர் அணி செயலாளர் சரவண கார்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்க கடிதம் கொடுத்துள்ளார்.

Next Story