ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 12:00 AM GMT (Updated: 19 Aug 2019 11:58 PM GMT)

கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியமும், ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனையும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், விழாவில் பேசியதாவது:-

மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஜெயலலிதாவின் அரசு அதிக முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. தமிழக அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்கள்தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மனுக்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மனுக்களின் மீதான தீர்வுக்குப்பின், செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்களும் நடத்தப்படும். சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின்போது தீர்வுகாணப்படும். இந்த சிறப்பு திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.76 லட்சத்து 25 ஆயிரம் நிதி வழங்கப்படும். 234 தொகுதிகளிலும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நான் 2011-ம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது, மக்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்துவைத்துக் கொண்டிருக்கின்றேன்.

மேட்டூரில் இருந்து வருகின்ற உபரிநீரை ஏரிகளில் நிரப்பவேண்டும் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் சொன்னார்கள். ரூ.565 கோடியில் 100 ஏரிகள் நிரப்பப்படும் திட்டம் தொடங்க இருக்கிறது. இந்த முதல்-அமைச்சரை உருவாக்கியவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்ற பொதுமக்கள். நீங்கள் ஓட்டுபோட்டு சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த காரணத்தினால்தான், இன்றைக்கு இந்த நிலையில் இருந்து உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். மக்கள் கொடுக்கின்ற மனுக்களை நாங்கள் பதிவுசெய்து படிப்படியாக திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறோம்.

சென்னைக்கு அருகில் ரூ.2 ஆயிரம் கோடியில் மிகப்பெரிய உணவுப் பூங்கா ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் நமது விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளுக்கு கட்டுப்படியான, நியாயமான விலை கிடைக்கும். ஆசியாவிலேயே மிக உன்னதமான கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1,200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க இருக்கிறோம். விவசாயிகளின் வருமானம் 2 மடங்கு ஆகவேண்டும் என்பதற்காக எங்களுடைய அரசு புதிய திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.

நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்த ஆட்சி 10 நாள் தாக்குப்பிடிக்குமா? ஒரு மாதம் தாக்குப்பிடிக்குமா? என்று சொன்னார்கள். 2 ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றது. இதற்கு முழு காரணம் மக்களும், அதிகாரிகளும் தான். உங்களுடைய அன்பும், ஆதரவும் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த ஆட்சி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றது.

வீட்டுமனை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் வீட்டுமனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோர்களுக்கு முதியோர் உதவித் திட்டத்தை அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதன்மூலம், புதிதாக தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு, ஜெயலலிதா காலத்தில் ரூ.2 லட்சமாக இருந்த காப்பீட்டுத் தொகை தற்பொழுது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதி, விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள், குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். உணவுதானிய உற்பத்தியில் தொடர்ச்சியாக விருது பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இதுபோன்ற காரணங்களினால் விவசாயம் மேம்படுகிறது, தொழில்வளம் பெருகுகின்றது, கைத்தறி, விசைத்தறி நெசவுத்தொழில் சிறந்து விளங்குகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story