முதல்-அமைச்சர், அமைச்சர் கருத்தில் முரண்பாடு: பால் வளத்துறை இயங்குவது லாபத்திலா?, நஷ்டத்திலா? மு.க.ஸ்டாலின் கேள்வி


முதல்-அமைச்சர், அமைச்சர் கருத்தில் முரண்பாடு: பால் வளத்துறை இயங்குவது லாபத்திலா?, நஷ்டத்திலா? மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 20 Aug 2019 10:45 PM GMT (Updated: 20 Aug 2019 10:30 PM GMT)

முதல்-அமைச்சர், அமைச்சர் கருத்தில் முரண்பாடு இருப்பதாகவும், பால் வளத்துறை இயங்குவது லாபத்திலா?, நஷ்டத்திலா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை,

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248-வது நினைவு நாளையொட்டி, நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் கூறியதாவது:-

கேள்வி:- ஒண்டிவீரன் மணி மண்டபம் விஸ்தரிப்பு பணிகளுக்காக பணம் ஒதுக்கி, இன்னும் அதற்கான வேலைகள் செய்து முடிக்கப்படவில்லையே?.

பதில்:- தி.மு.க. சார்பில் அதற்கான, எதிர்ப்புகள் அனைத்தையும் நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். புதிதாக எதுவும் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.

கேள்வி:- தற்போது உயர்ந்துள்ள பால் விலை உயர்வால் ஏழை - எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வைப் பற்றி உங்களது பதில்?.

பதில்:- 2011-ம் ஆண்டு, என்றைக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததோ, அன்றில் இருந்து பால் விலை உயர்வு என்பது 3-வது முறையாக அரங்கேறி இருக்கின்றது. எப்பொழுதும் “மக்களுக்கு பால் வார்ப்பார்கள்” என்று தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். அந்த பாலினால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கக்கூடிய நிலைதான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதைக் கேட்டால் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்வார் என்றால், கொள்முதல் விலையை உயர்த்துகின்றபோது, அதனை வாங்குகின்ற வாடிக்கையாளர்களுக்கும் சிரமப்படுத்தக்கூடாத வகையில் அதனையும் நாங்கள் உயர்த்துகிறோம் என்று பெருமையாகவும், வேறு வழியில்லை என்றும் சொல்கின்றார்.

எனவே கொள்முதலாளர்களுக்கும், மக்களுக்கும் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்கு, சண்டையை மூட்டுவதற்கான முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதுமட்டுமல்ல பால்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ராஜேந்திர பாலாஜி, இந்த பால்வளத் துறையைப் பொறுத்தவரையில் அதிக லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்று பெருமையோடு சொல்கின்றார். ஆனால், முதல்-அமைச்சர் என்ன சொல்கின்றார் என்றால், நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றது அதனால்தான் பால் விலையை உயர்த்துகின்றோம் என்று சொல்கின்றார். எனவே அவர்களிடத்திலேயே முரண்பாடு இருக்கின்றது. எது உண்மை, எது பொய் என்பதை மக்களிடத்தில் அவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை.

கேள்வி:- நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா?

பதில்:- இடைத்தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அப்படி அறிவித்ததற்கு பிறகு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கின்றேன்.

கேள்வி:- மாவட்டங்கள் தொடர்ந்து பிரிக்கப்படுவது உண்மையிலேயே வளர்ச்சிக்கானதா, அல்லது நிர்வாக குறைபாடா?.

பதில்:- அ.தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கின்ற ஊழல்கள், லஞ்சம், லாவண்யம், கொள்ளை அடித்துக்கொண்டிருப்பது, அவற்றையெல்லாம் மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு செய்யப்படுவது. நல்ல எண்ணத்தோடு செய்யப்படுவதாக நான் கருதவில்லை.

கேள்வி:- நாடாளுமன்றத்தில் தி.மு.க. 3-வது பெரிய கட்சி. காஷ்மீர் சம்பந்தமாக டெல்லியில் போராட்டம் அறிவித்திருக்கின்றீர்கள். எனவே, தி.மு.க. தேசிய அரசியலை நோக்கி செல்வதாக சொல்லமுடியுமா?.

பதில்:- நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துனை பேரும் தமிழ்நாட்டிற்காக மட்டுமல்ல, இந்தியாவில் ஏற்படக்கூடிய எந்த பிரச்சினைகளாக இருந்தாலும் எதிர்த்து உரிமையோடு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடிய நிலையில், இப்பொழுது மட்டுமல்லாமல் அறிஞர் அண்ணாவின் காலத்திலும், தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்தும் அதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

கேள்வி:- பொதுக்கூட்டத்தில் பேசும்போது, நீங்கள் துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டுகின்றார்கள்?, அதைப் பற்றி தங்களின் கருத்து.

பதில்:- அது அவர்களது தரத்தினை சொல்கின்றது. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் எதையும் ஆதாரத்தோடு சொல்லவேண்டும் சும்மா, பொத்தாம் பொதுவாக தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா போன் றவர்கள் போல் வாய்க்கு வந்தபடி சொல்லிவிட்டு போகக் கூடாது. எதையும் புள்ளி விவரத்தோடு, ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். எனவே அதற்காக சில புள்ளி விவரங்களை சரியாக சொல்ல வேண்டும்.

கேள்வி:- ஆட்டோமொபைல் தொழில் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, பலருக்கும் வேலை வாய்ப்பு இழப்பு என்பது ஏற்பட்டுள்ளது. அதனைப் பற்றி தங்கள் கருத்து?.

பதில்:- அதனை எல்லாம் மூடி மறைப்பதற்காக தான் காஷ்மீர் பிரச்சினையை இன்றைக்கு பா.ஜ.க. கையில் எடுத்திருக்கின்றது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.


Next Story