சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்


சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்
x
தினத்தந்தி 22 Aug 2019 9:04 PM GMT (Updated: 22 Aug 2019 9:04 PM GMT)

சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய சம்பவத்தில் ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 55). இவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் புத்துக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் குப்பன் இறந்து விட்டார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் குப்பனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் அவரது சொந்த ஊரான நாராயணபுரம் அருகே உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். ஆனால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள நிலத்தின் உரிமையாளர் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்ததால் சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லை. இதனால் அப்பகுதி மக்கள், உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல நிலத்தின் உரிமையாளரிடம் வழி கேட்டனர். ஆனால் நில உரிமையாளர் வழிவிட மறுத்ததால் அப்பகுதி மக்களுக்கும் நில உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் வேறுவழியின்றி குப்பனின் உடலை பாடை கட்டி ஊர்வலமாக தூக்கி வந்து 20 அடி உயரம் உள்ள மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி ஆற்றில் இறக்கி அருகே உள்ள சுடுகாட்டிற்கு தூக்கி சென்று அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி வெளியானது.

இந்த செய்தியை மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் படித்து பார்த்தார். பின்னர், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியபிரசாத் ஆகியோர் முன்பு ஆஜராகி, ‘சாதி பாகுபாட்டின் காரணமாக இறந்து போனவரின் உடலை கயிறு கட்டி பாலத்தில் இருந்து இறக்கப்பட்டு, அதன்பின்னர் சுடுகாட்டுக்கு தூக்கிச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறினார்.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story