ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஓய்வூதிய பண பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் - டி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு


ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஓய்வூதிய பண பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் - டி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Aug 2019 11:15 PM GMT (Updated: 22 Aug 2019 10:44 PM GMT)

இந்த மாதம் ஓய்வு பெற உள்ள ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜனின் ஓய்வூதிய பண பலன்களை நிறுத்தி வைக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ராமநாதபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் எம்.நடராஜன். இவரது மனைவி கனிமொழி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘1984-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். என் கணவர் குடும்பத்தை சரிவர பார்ப்பது இல்லை. மகன்களுக்கு தேவையான கல்விச் செலவுகள், மருத்துவ செலவுகள் உள்ளிட்ட செலவுகளை செய்வது இல்லை.

தற்போது நான் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி, என் இரு மகன்களை வளர்த்து வருகிறேன். ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் என் கணவர், வருகிற 31-ந்தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். அவர் ஓய்வு பெற்றுவிட்டால், எங்களுக்கு ஜீவனாம்சம் தரமாட்டார். அதனால், மாதந்தோறும் அவரது ஊதியத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் பிடித்தம் செய்து எங்களுக்கு வழங்கவேண்டும் என்றும், ஜீவனாம்சம் பாக்கித்தொகை ரூ.36 லட்சத்தை, அவரது ஓய்வு பண பலனில் இருந்து பிடித்தம் செய்து வழங்கவேண்டும் என்றும் கூடுதல் டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜனும், அவரது மனைவி கனிமொழியும், ஐகோர்ட்டில் உள்ள சமரச மையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்’ என்று உத்தரவிட்டார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுக்கு இருவரும் வரவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கனிமொழி தரப்பு வக்கீல் ஆஜராகி, ‘சமரச பேச்சுவார்த்தையின்போது, மறு திருமணம் செய்ய தடையாக இருக்கக்கூடாது என்று முதல் நிபந்தனையை நடராஜன் விதித்தார். அதனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது’ என்றார்.

இதையடுத்து எதிர்மனுதாரர் நடராஜன் எங்கே? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ், ‘அவர் ஆஜராகவில்லை’ என்று பதிலளித்தார். இதையடுத்து நீதிபதி, ‘துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜனுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பண பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார். விசாரணையை வேறு ஒரு தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Next Story