பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு


பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு
x
தினத்தந்தி 23 Aug 2019 4:50 AM GMT (Updated: 23 Aug 2019 8:26 AM GMT)

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து கோவையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக போலீசாருக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்றிரவு முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் ஐவர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும், மாறுவேடத்தில் வலம் வருவதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளதால், கோவை மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story