சென்னை அருகே நடுக்கடலில் இந்தியா-அமெரிக்கா கப்பல்கள் கூட்டு பயிற்சி


சென்னை அருகே நடுக்கடலில் இந்தியா-அமெரிக்கா கப்பல்கள் கூட்டு பயிற்சி
x
தினத்தந்தி 23 Aug 2019 7:25 PM GMT (Updated: 23 Aug 2019 7:25 PM GMT)

இந்தியா-அமெரிக்கா கப்பல்கள் கூட்டு பயிற்சி சென்னை அருகே நடுக்கடலில் நடந்தது.

சென்னை,

சர்வதேச இணக்க முறை பயணமாக நல்லுறவு அடிப்படையில் அமெரிக்காவின் கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த ‘ஸ்ரெட்டன்’ கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்த கப்பல் சென்னை கடல் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பு நடுக்கடலில் இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த ‘சவுரியா’, ‘அபைக்’ ஆகிய கப்பலுடன் சேர்ந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது.

பேரிடர் கால மீட்பு பணி, கடற்கொள்ளையை தடுத்தல், சட்டவிரோத மீன்பிடித்தலை தடுத்தல், எண்ணெய் கசிவில் இருந்து கடல்வளம் மாசு அடையாமல் தடுத்தல் உள்பட கடலோர பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பயிற்சியில் இருநாட்டு வீரர்களும் பங்கேற்றனர்.

இந்த பயிற்சியை முடித்து சென்னை துறைமுகத்துக்கு நேற்று மதியம் வருகை தந்த அமெரிக்க கப்பல் கேப்டன் மற்றும் வீரர்களுக்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.சஞ்சீவ் திவான் தலைமையில் பேண்டு-இசை வாத்தியங்கள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் இருநாட்டு கொடிகளையும் கையில் ஏந்தியபடி கரையில் நின்று வரவேற்பு அளித்தனர்.

கப்பலில் இருந்து இறங்கியவுடன் அமெரிக்க கப்பல் கேப்டன் பாப்லிட்டில் மற்றும் துணை கேப்டன்கள் 4 பேருக்கு சந்தன மாலை மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்புகளை கண்டு அமெரிக்க அதிகாரிகளும், வீரர்களும் நெகிழ்ந்து போயினர்.

பின்னர் அமெரிக்க கப்பல் கேப்டன் பாப்லிட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘ஸ்ரெட்டன்’ கப்பல் மூலம் கடந்த 2009-ம் ஆண்டு கொச்சி துறைமுகத்துக்கு வந்திருக்கிறோம். முதல் முறையாக சென்னை துறைமுகத்துக்கு தற்போது வருகை தந்திருக்கிறோம்.

பயங்கரவாதம், கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையில் இருநாடுகளும் (இந்தியா, அமெரிக்கா) ஒரே கொள்கையில் இருக்கிறது. இந்திய கடலோர பாதுகாப்பு படை மிகவும் சாமர்த்தியமாக இருப்பதை கூட்டு பயிற்சியில் உணர முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கப்பல் அருகில் இந்திய கடலோர பாதுகாப்பு படையின் ‘சவுரியா’ கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் கப்பலை அமெரிக்க வீரர்களும், அவர்களுடைய கப்பலை நம் நாட்டு வீரர்களும் பார்வையிட்டனர்.

அமெரிக்க கப்பல் 27-ந்தேதி வரை சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வரும் நாட்களில் சென்னையில் தங்கி இருக்கும், அமெரிக்க வீரர்கள், இந்திய வீரர்களுடன் பீச் வாலிபால் விளையாட்டு போட்டியிலும் பங்கேற்க உள்ளனர்.

Next Story