ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக உள்ளது கே.எஸ்.அழகிரி பேட்டி


ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக உள்ளது கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 23 Aug 2019 11:15 PM GMT (Updated: 23 Aug 2019 8:23 PM GMT)

ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது:-

சிதம்பரம் வழக்கில் கபில்சிபல் சிறப்பாக வாதாடினார். மத்திய அரசு ஒரு வழக்கை எப்படி எல்லாம் ஜோடித்து உள்ளது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும். இந்த விவகாரத்தில் தி.மு.க. மவுனம் காக்கவில்லை.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழகான முறையில் சொல்லி இருக்கிறார். தி.மு.க.-காங்கிரஸ் இடையே நல்ல புரிதல் உள்ளது. எங்கள் நட்பே நேர்மையானது. இதில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை.

தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டு உள்ளனர். கட்சியில் தற்போது ஒற்றுமை மற்றும் எழுச்சி எழுந்து உள்ளது. இந்தியாவில் 9 சதவீத வளர்ச்சியை காட்டியவர் ப.சிதம்பரம். மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கினார். இந்தியாவில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார். தொழில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

ப.சிதம்பரம் எப்போதும் பெருமைக்குரியவராகத்தான் இருந்துள்ளார். குற்றச்சாட்டு சொல்வதால் குற்றவாளியாக முடியாது. எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறையை ஏவி விடவேண்டும் என்று மோடி அரசு விரும்புகிறது.

ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக உள்ளது. எல்லாவிதமான குற்றங்களையும் தவிடு பொடியாக்குவோம். சி.பி.ஐ., அமலாக்கத்துறை குற்றம் சாட்டுவதால் உண்மையாகி விடாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முற்றிலும் தவறான நிலையை எடுத்து உள்ளது. இது தர்மத்துக்கும், நீதிக்கும் புறம்பானது. இது வெற்றி பெறாது.

தகுதி தேர்வில் 1 சதவீதம் ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறாதது தேசத்திற்கு பின்னடைவு. தரமான ஆசிரியர்களை உருவாக்கினால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர்களை தரமானவர்களாக உருவாக்குவதற்கான பயிற்சியை அரசு அதிகப்படுத்த வேண்டும். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக போலீசார் திறமையானவர்கள். தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை கட்டுப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story