விஜயகாந்த் 67-வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


விஜயகாந்த் 67-வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Aug 2019 8:43 PM GMT (Updated: 24 Aug 2019 8:43 PM GMT)

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 67-வது பிறந்தநாள் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சியின் அமைப்பு ரீதியான 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1,500 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் எந்திரங்களை (ஆர்.ஓ.) வழங்கினார். அதனைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் அப்பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்கினார். அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.

விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

பிறந்தநாளை ‘கேக்’ வெட்டி ஆடம்பரமாக கொண்டாடும் கலாசாரத்துக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு பயன்படும் வகையில் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், விஜயகாந்த். எம்.ஜி.ஆரை தனது முன்மாதிரியாக கொண்ட விஜயகாந்த், தன் வாழ்க்கையையே பிறருக்கு உதாரணமாக மாற்றி இருக்கிறார். தே.மு.தி.க. சார்பில் வீடு தோறும் மரம் நடுதல், மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம். கிராமங்களில் உள்ள குளங்களை தூர்வார இருக்கிறோம்.

எந்த லட்சியத்தோடு தொடங்கப்பட்டதோ, அந்த லட்சியத்தை விரைவில் தே.மு.தி.க. எட்டும். எதிர்கால அரசியலில் தே.மு.தி.க. மாபெரும் அங்கம் வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கட்சியின் மாநில செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பா.பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story