விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ல் முப்பெரும் விழா; பிரேமலதா விஜயகாந்த்


விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ல் முப்பெரும் விழா; பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:07 AM GMT (Updated: 25 Aug 2019 8:47 AM GMT)

விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் வருகிற செப்டம்பர் 15ந்தேதி முப்பெரும் விழா நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் களம் கண்ட, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 67வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.  விஜயராஜ் என்ற இயற்பெயர் கொண்ட அவர் திரைத்துறையில் விஜயகாந்த் என்ற பெயரில் காலடி எடுத்து வைத்து முன்னேறினார்.  இந்த பெயர் அவருக்கு கை கொடுத்தது.

கடந்த 1979வது ஆண்டில் இனிக்கும் இளமை என்ற படத்தில் நடிக்க தொடங்கி வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், வானத்தை போல என பல வெற்றி படங்களை வழங்கினார்.  கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததற்கு பின்பு அவர் ரசிகர்களால் கேப்டன் என அழைக்கப்பட்டார்.

இதன்பின்னர் கடந்த 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்து பல முன்னேற்றங்களை கண்டார்.

அவரது 67வது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில், விஜயகாந்திற்கு பள்ளிக்குழந்தைகள் இனிப்பு ஊட்டி விட்டனர்.

அக்கட்சியின் துணை பொது செயலாளர் சுதீஷ் நிகழ்ச்சியின் இடையே கூறும்பொழுது, ஆண்டுதோறும் விஜயகாந்தின் பிறந்தநாளில், ஏதேனும் ஒரு மக்கள் நல திட்டம் தொடங்கப்பட்டு அதனை தே.மு.தி.க. செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

இதனிடையே பிரேமலதா விஜயகாந்த் கூறும்பொழுது, விஜயகாந்த் பூரண உடல் நலமுடன் இருக்கிறார்.  அவர் தலைமையில் திருப்பூரில் வருகிற செப்டம்பர் 15ந்தேதி முப்பெரும் விழா நடைபெறும் என கூறினார்.

Next Story