இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து ரஷியாவுடன் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடக்கிறது


இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து ரஷியாவுடன் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடக்கிறது
x
தினத்தந்தி 26 Aug 2019 5:30 AM IST (Updated: 26 Aug 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா அடுத்த மாதம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறது.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது ஆற்றிய உரையில், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த திட்டத்தின்படி, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, 2022-ம் ஆண்டு, விண்வெளிக்கு 3 அல்லது 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த திட்டத்தை இந்தியா நிறைவேற்றி சாதனை படைப்பதற்கு ரஷியாவும் உதவிக்கரம் நீட்டுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே ரஷிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ரோஸ்காஸ்மாஸ் தலைமை இயக்குனர் டிமிட்ரி ரோகாசின், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் கடந்த 21-ந் தேதி மாஸ்கோவில் ஆலோசனை நடத்தி உள்ளார்.

விண்வெளிக்கு செல்லும் 4 இந்திய வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ரஷியாவின் யூரி ககாரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பது பற்றி அவர்கள் பேசி உள்ளனர்.

இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் போடவும் அவர்கள் முடிவு செய்தனர். அதில், இந்திய வீரர்களுக்கு விண்கலத்தில் அமைக்கும் இருக்கைகளையும், வீரர்கள் அணிவதற்கான விண்வெளி உடைகளையும் ரஷியா வழங்குவது பற்றியும் இடம் பெறும்.

இந்தநிலையில், ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 6-ந் தேதி வரை நடக்கிற கிழக்கு பொருளாதார மன்ற மாநாட்டின்போது, இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவின் ககன்யான் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரஷியா முக்கியமான கூறுகளை வழங்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

குறிப்பாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதில் இரு தரப்பும் ஒத்துழைப்பது, செயற்கை கோள் வழிசெலுத்துதல், இயந்திர தொழில் நுட்ப உதவிகள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

இந்த தகவல்களை ரஷிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ரோஸ்காஸ்மாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியா வீரர்களை அனுப்புவது பற்றி ரஷியாவுடன் பேச்சு நடந்துள்ளது. பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. ஆனால் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லப்போகிற இந்திய வீரர்களுக்கு ரஷியா பயிற்சி அளிப்பது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டது.

செயற்கைக்கோள் வழி செலுத்துதல் அமைப்புகளின் துல்லியத்தை அதிகரிக்க இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் தரை கட்டுப்பாட்டு மையம் அமைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்தியாவில் தயாரிப்போம் என்னும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ், இந்தியாவுக்கு பகுதியளவு கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் தொழில் நுட்பத்தை வழங்க ரஷியா முன் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story