சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது; சென்னை ஐகோர்ட்டு வருத்தம்


சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது; சென்னை ஐகோர்ட்டு வருத்தம்
x
தினத்தந்தி 26 Aug 2019 9:20 AM GMT (Updated: 2019-08-26T14:50:14+05:30)

சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் குப்பன்.  விபத்தில் உயிரிழந்து விட்டார்.  அவரது உடலை மயானத்திற்கு கொண்டு சென்ற வழியில், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் பாதை மறிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனால் குப்பனின் உடல் மேம்பாலத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே இறக்கி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு  தனி மயானம் அமைக்கப்பட்டு உள்ளதாக தாசில்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனி மருத்துவமனைகளோ, அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ இல்லாத நிலையில் அவர்களுக்கு தனி மயானத்தை அரசே அமைத்து கொடுப்பது சாதி பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளதாக தெரிவித்தனர்.

தெருக்களில் இருந்த சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்ற பெயர்களை நீக்காதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Next Story