சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள திசுக்கள் உயிரி வங்கி மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை உருவாக்க முடியும் மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே பேச்சு


சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள திசுக்கள் உயிரி வங்கி மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை உருவாக்க முடியும் மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே பேச்சு
x
தினத்தந்தி 26 Aug 2019 10:45 PM GMT (Updated: 2019-08-27T09:08:11+05:30)

சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள திசுக்கள் உயிரி வங்கி மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை உருவாக்க முடியும் என்று மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே பேசினார்.

சென்னை,

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், சென்னை ஐ.ஐ.டி.யும் இணைந்து தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியை உருவாக்கி உள்ளது. இந்த உயிரி வங்கியானது தற்போது, புற்றுநோய் மரபணுவியல் தரவுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் உருவாக்கப்பட்டுள்ள நாட்டிலேயே தனித்துவமிக்க இந்த தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே பார்வையிட்டார். பின்னர், அவர் பேசியதாவது:-

பிறநாடுகளில் பின்பற்றக்கூடிய சிகிச்சை முறைகளைத் தான் தற்போது நம் நாட்டு புற்றுநோயாளிகளுக்கு பெரும்பாலும் வழங்கி வருகிறோம். ஆனால் நமக்கென்று பிரத்யேகமான சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்றன.

போர் தொடுக்க விருப்பம்

சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியின் மூலம் திரட்டப்படும் தரவுகள் வழியாக நமது மண்ணிற்கு ஏற்ற புற்றுநோய்க்கு எதிரான வலுவான சிகிச்சை முறைகளை உருவாக்க முடியும்.

இந்த உயிரி வங்கியில் ஏற்கனவே 3 ஆயிரம் புற்றுநோய் திசுக்களின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கு எதிராக போர் தொடுக்க விரும்புகிறேன், அனைவரும் ஒன்றிணைந்தால் அந்த போரில் நாம் வெல்வது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் போது, தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கி, சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து புற்றுநோய் திசுக்களை ஆய்வுக்காக சேகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தேசிய புற்றுநோய் திசுக்கள் உயிரி வங்கியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலிங்கம், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story