உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி மானியத்தை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை நிர்மலா சீதாராமனிடம், எஸ்.பி.வேலுமணி நேரில் கோரிக்கை


உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி மானியத்தை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை நிர்மலா சீதாராமனிடம், எஸ்.பி.வேலுமணி நேரில் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2019 11:00 PM GMT (Updated: 27 Aug 2019 3:48 AM GMT)

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி மானியத்தை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நிர்மலா சீதாராமனிடம் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது நிர்மலா சீதாராமனிடம், எஸ்.பி.வேலுமணி தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய 2 மனுக்களை கொடுத்தார்.

அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

நன்றி

இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான அம்சங்கள் அடங்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக, தமிழக முதல்-அமைச்சரும், நானும் உங்களை முழுமனதோடு வாழ்த்துகிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆக்கப்பூர்வமான இந்தியா மீண்டும் உருவாக்கப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை வரவேற்பதோடு, அதற்கு ஆதரவு தருகிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான 14-வது மத்திய நிதி ஆணையத்தின் 2018-19-ம் ஆண்டுக்கான முதல் தவணை அடிப்படை மானியம் ரூ.1,608.03 கோடி விடுவிப்பதற்கு நீங்கள் உதவி செய்தீர்கள்.

உங்களுடைய தலையீடு மற்றும் முயற்சியினால் மத்திய அரசு விடுவித்த இந்த மானியம், தமிழக மக்களுக்கு தர சேவைகள் வழங்குவதற்கும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுடைய அடிப்படை கடமைகளையும், செயல்பாடுகளையும் திறம்பட செய்வதற்கும் மிகவும் உதவிக்கரமாக இருந்தது. மானிய தொகையை விடுவிப்பதற்காக நீங்கள் எடுத்த நடவடிக்கைக்காக தமிழக முதல்-அமைச்சர் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மானியம்

அதேசமயத்தில் 14-வது மத்திய நிதி ஆணையத்தின் கீழ்கண்ட மானியங்கள் தமிழகத்துக்கு இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதன் விவரம் வருமாறு:-

* 2017-18-ம் ஆண்டுக்கான ரூ.560.15 கோடி, 2018-19-ம் ஆண்டுக்கான ரூ.636.12 கோடி என செயலாக்க மானியம் நிலுவையில் இருக்கிறது.

* 2018-19-ம் ஆண்டுக்கான நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ம் தவணையாக வழங்க வேண்டிய அடிப்படை மானியம் ரூ.1,608.03 கோடி இன்னும் வழங்கப்படவில்லை.

* 2019-20-ம் ஆண்டுக்கான நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக வழங்கவேண்டிய அடிப்படை மானியம் ரூ.2,172.78 கோடி நிலுவையில் உள்ளது.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக செய்யும் தினசரி பணிகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி தேவைப்படுகிறது. எனவே 2018-19-ம் ஆண்டுக்கான 2-ம் தவணை அடிப்படை மானியம், 2019-20-ம் ஆண்டுக்கான முதல் தவணை அடிப்படை மானியம் ரூ.3,780.81 கோடி மற்றும் மத்திய நிதி ஆணையத்தின் கீழ் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18, 2018-19-ம் ஆண்டுக்கான செயலாக்க மானியம் ரூ.1,196.27 கோடி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தியாவை வலிமையான, நவீன மற்றும் துடிப்பானதாக மாற்றுவதற்கு மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தினசரி விமான சேவை

இதேபோல வர்த்தகம் செய்பவர்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று கோவையில் இருந்து டெல்லிக்கு தினசரி விமான சேவையை தொடங்க வேண்டும். கோவையில் இருந்து துபாய்க்கு வேறு விமான நிலையங்களுக்கு சென்று பின்னர் அங்கிருந்து செல்லும் நிலை இருக்கிறது. இதனால் பயணிகளின் பணம் மற்றும் நேரம் விரயமாகிறது. இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து துபாய் நாட்டுக்கும் தினசரி விமான சேவையை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டடுக்கு நகரங்களில் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் முக்கிய தொழில் முனையமாகவும் கோவை திகழ்கிறது. எனவே செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மும்பை-பெங்களூரு தொழில் வழித்தடத்தை மத்திய அரசு கோவை வரையிலும் நீட்டிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

கருத்தரங்கு

இதைத்தொடர்ந்து 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் இணைப்புகள் மூலம் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்ட கருத்தரங்கில் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று பேசினார்.

“தமிழகத்தில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் எல்லா வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமானால் ரூ.47 ஆயிரத்து 820 கோடி நிதி தேவைப்படும். இந்த நிதியை மத்திய அரசு தர வேண்டும்” என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத் தினார்.

Next Story