வைகை, பெரியார் மற்றும் மேட்டூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு


வைகை, பெரியார் மற்றும் மேட்டூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 27 Aug 2019 9:46 AM GMT (Updated: 2019-08-27T15:16:23+05:30)

வைகை, பெரியார் மற்றும் மேட்டூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சென்னை,

தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தின் நீர்நிலைகளில் பரவலாக நீர் நிரம்பியது.  கர்நாடக அணைகளில் நிரம்பிய நீரானது திறந்து விடப்பட்டு தமிழக எல்லை வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து வைகை, பெரியார் மற்றும் மேட்டூர் அணைகளில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக தண்ணீர் திறந்து விட முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதன்படி, தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கும், முதல் போக சாகுபடிக்கும் பெரியார் அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி வீதம் 29ந்தேதி முதல் (நாளை மறுநாளில் இருந்து) 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  நீர்திறப்பால் தேனி, உத்தமபாளையம், போடி வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வைகை அணையில் இருந்தும், 29ந்தேதி முதல் (நாளை மறுநாள்) 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோன்று மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக நாளை முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நீர்திறப்பால் திருச்சி, தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Next Story