அமெரிக்காவில் உள்ள ‘நாசா’ விண்வெளி மையத்துக்கு செல்ல தமிழக மாணவி தேர்வு


அமெரிக்காவில் உள்ள ‘நாசா’ விண்வெளி மையத்துக்கு செல்ல தமிழக மாணவி தேர்வு
x
தினத்தந்தி 27 Aug 2019 11:00 PM GMT (Updated: 2019-08-28T03:57:00+05:30)

அமெரிக்காவில் உள்ள ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்வதற்கு போட்டித்தேர்வு மூலம் தமிழக மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

‘கோ4குரு’ என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வருகிறது.

கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் ஜே.தான்யா தஸ்னம், சாய் புஜிதா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் முதல் இடம் பிடித்த ஜே.தான்யா தஸ்னம் என்ற மாணவி தமிழகத்தை சேர்ந்தவர். இவர் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கடச்சனேந்தலை சேர்ந்தவர்.

சாய் புஜிதா ஆந்திராவையும், அபிஷேக் சர்மா மராட்டிய மாநிலம் அலிபாக்கையும் சேர்ந்தவர்கள்.

அக்டோபரில் செல்கிறார்

ஜே.தான்யா தஸ்னம் மதுரையில் உள்ள மகாத்மா மான்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தவர்.

இவர் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஜே.தான்யா தஸ்னம் ஒருவாரம் செலவிட இருக்கிறார். ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றி பார்ப்பதோடு, அங்குள்ள விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடவும் இருக்கிறார்.

மகிழ்ச்சி

‘கோ4குரு’ அமைப்பு சார்பில் மாணவி ஜே.தான்யா தஸ்னத்துக்கு அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

இதில் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் வீரரும், விஞ்ஞானியுமான டான் தாமஸ், ‘கோ4குரு’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காயம்பூ ராமலிங்கம், சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்.எம்.வீரைய்யன், இயக்குனர் சவீதா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜே.தான்யா தஸ்னத்துக்கு அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டை வழங்கியதோடு, ‘நாசா’ செல்வதற்காக ‘கோ4குரு’ நிறுவனம் நடத்தும் அடுத்த ஆண்டுக்கான பொது அறிவு போட்டியையும் ‘நாசா’ முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் தொடங்கி வைத்தார்.

‘நாசா’ செல்வது குறித்து ஜே.தான்யா தஸ்னம் கூறும்போது, “5-ம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே ‘நாசா’வுக்கு செல்லவேண்டும் என்பது என்னுடைய ஆசை. மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமை என்னுடைய முன்மாதிரியாக கொண்டு கஷ்டப்பட்டு படித்தேன். இதனால் ‘நாசா’ செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை எங்கள் பள்ளி தாளாளர் பிரேமலதா பன்னீர்செல்வம் ஊக்குவித்ததன் மூலமாகத்தான் இந்த இலக்கை எட்ட முடிந்தது” என்றார்.

ஜே.தான்யா தஸ்னத்தோடு அவருடைய தந்தை ஜாபர் உசேன், தாயார் சிக்கந்தர் ஜனான், சகோதரி நஜீமா நுஹா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

டான் தாமஸ் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்ற இருக்கிறார்.

இன்று சவீதா பல் மருத்துவ கல்லூரியிலும், நாளை வேலூரில் உள்ள ஒரு பள்ளியிலும், நாளை மறுதினம் கோவையில் உள்ள ஒரு கல்லூரியிலும், 31-ந்தேதி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரி மற்றும் ஒரு பள்ளியிலும் மாணவர்களோடு டான் தாமஸ் கலந்துரையாடுகிறார். இதேபோல அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சில பள்ளிகளிலும் மாணவர்களோடு அவர் கலந்துரையாட உள்ளார்.

Next Story